Tuesday, January 12, 2010

உச்சநீதிமன்றமும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும்: தில்லி உயர்நீதிமன்றம்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும் என்று தில்லி உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

88 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பில், 'நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கான சலுகை அல்ல, அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தான்' என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜீத் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய குழு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலக விவகாரங்களையும் பெறலாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சார்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தை அச்சட்டத்தின் கீழ் கொண்டு வருவது என்பது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிப்பதாக அமையும் என்று கூறியிருந்தது. ஆனால், இக்கருத்தை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மேலும், நீதித்துறையில் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த வாரம் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்கள் என்றும் நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.

Sunday, January 10, 2010

வேளாண் அமைச்சக ஆவணங்களை பொது மக்கள் பார்க்க அனுமதி

மத்திய வேளாண் அமைச்சகம், அதன் பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அடிமட்ட நிலையில் உள்ள பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை பயனாளிகளுக்கு தெரிவிப்பதில் தயக்கம் இருக்கக்கூடும் என்பதால், அடிமட்ட நிலையில் ஆவணங்கள கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கு முக்கியதுத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வேளாண்-கூட்டுறவுத்துறை அமைச்சக செயலாளர் டி நந்தகுமார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமச் செயலாளர்களுக்கு அலுவல் ரீதியாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு, மாநில அரசுகள் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு திட்டம் குறித்தும், அதனை செயல்படுத்தும் அமைப்புகள் குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளின் அலுவலகங்களில் பயனாளிகள், சம்பந்தப்பட்ட அனைவரும் பார்ப்பதற்கும், நகல் எடுப்பதற்கும் வசதியாக வைக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தெரிவிப்பதற்கான ஒரு நடைமுறைய மாநில அரசில் உருவாக்க வேண்டும்.

இது தொடர்பாக, மாநில அரசுகள் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ஒரு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

நம்பகமான முறையிலும், வெளிப்படையான முறையிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைய அடிமட்ட நிலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வேளாண் துறையின் திட்டங்கள், மாநில அரசுகளின் துறைகள், சிறப்பு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. மாநில அளவிலான பல்வேறு செயல்படுத்தும் அமைப்புகளிடம் பயனாளிகளின் விவரங்கள் உள்ளன. எனவே, மாநில அரசின் செயல்படுத்தும் அமைப்புகள் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான இந்த நடைமுறைய சிறப்பாகவும், நல்ல முறையிலும் செயல்படுத்தலாம்.

திட்டச் செலவுகள், கிடைக்கும் மானியம், திட்டங்களின் பயனாளிகள் தொடர்பான விவரங்களை அனைத்து செயல்படுத்தும் அமைப்புகளும் தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டால், திட்டங்களின் செயல்பாடு மேலும் நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் அமையும்.

வேளாண்மையின் பல்வேறு துறைகள் மேம்பாட்டுக்காக, வேளாண்மை, கூட்டுறவுத்துறை மாநிலங்களுக்கு 23 திட்டங்களுக்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டங்களில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் பனை, பருப்பு வகைகள் மற்றும் சோளத்திற்கான ஒருங்கிணைந்த திட்டம், தேசிய தோட்டக்கலைத் திட்டம், பருத்தி, சணல் தொழில்நுட்பத் திட்டம் ஆகியவையும் அடங்கும் என்று கூறியுள்ளார்.


Sunday, January 3, 2010

தகவல் பெறுவதற்கான படிகள் சுருக்கமாக

1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 , பிரிவு 5ன் கீழ் பொது தகவல் அலுவலரிடம் மனு செய்தல் (சட்டப் பிரிவு 7(1)ன்படி தகவல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் )

2. இச்சட்டப் பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீடு மேல் முறையீட்டு அலுவலருக்கு விண்ணப்பித்தல் (முதுநிலை பொது தகவல் அலுவலர்) விண்ணப்பம் பெற்ற 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட வேண்டும். சில நேர்வுகளில் 45 நாட்களுக்குள் தகவல் அளிக்கலாம்.

3. இச்சட்டப் பிரிவு 19(3)ன்கீழ் 2வது மேல் முறையீடு தமிழ் நாடு தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். (முதல் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணை பெற்ற 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பிக்க வேண்டும் )

4. இச்சட்டப் பிரிவு 19(9)ன்கீழ் தமிழ் நாடு தகவல் ஆணையம் தனது முடிவினையும் மற்றும் மேல்முறையீட்டுக்கான உரிமைகளையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய முடிவுகளால் பாதிக்கப்பட்டோர் பரிகாரம் வேண்டி நீதிப் பேராணை வழக்கு இந்திய அரசு அமைப்பு சட்டத்தின்கீழ் தொடரலாம்.

தண்டனைகள்

மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் தீர்மானிக்கும்போது:

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;

2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ;

3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் மறுக்குமிடத்தும் ;

4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;

5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/-

தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.

பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும்.

மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.

மேல்முறையீட்டு மாதிரி விண்ணப்ப படிவம்

பெறுநர்

( தகுதியுடைய அதிகாரி பற்றி குறிப்பிடப்படவேண்டும்)

1) விண்ணப்பதாரரின் முழுப்பெயர் :

2) முகவரி :

3) வேண்டப்படும் தகவல் விவரங்கள் :

4) வேண்டப்படும் தீர்வு :

5) தகவல் தொடர்புடைய துறை அல்லது அலுவலரின் பெயர்:

6) தகவலின் பொருண்மை :

7) தகவல் தொடர்புடைய பகுதி/ஆண்டு/இடம் :

8) தகவல் வேண்டப்படுவதின் நோக்கம் :

இடம் :

நாள் :

விண்ணப்பதாரரின் ஒப்பம்