Wednesday, August 11, 2010

எங்கே அந்த ஆவணங்கள்?

ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுப்போன சொத்து என்று நாம் மார்தட்டிக் கொள்வதில் ஒன்று இந்திய அரசு நிர்வாகம். எதுவுமே இங்கே சட்டப்படிதான் நடக்கும். தகுந்த குறிப்புகளுடன் இன்ன சட்டப்பிரிவின்படி மட்டுமே எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட வேண்டும் என்கிற பிரிட்டிஷ் காலத்திய நிர்வாக முறையின் நம்பகத்தன்மையைப் பற்றிச் சிலாகித்துப் பேசாதவர்கள் யாரும் கிடையாது.ஆனால், இந்த பிரிட்டிஷ் காலத்து நிர்வாக முறையையும் நமது சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்கள் தங்களது வசதிக்கேற்ப நீர்த்துப்போகச் செய்து விட்டிருக்கிறார்கள். அதுமட்டுமா? அரசு எடுக்கும் முக்கியமான முடிவுகள் சரித்திர ஆவணங்களாகப் பாதுகாக்கப்பட வேண்டியவை. அதற்காகத்தானே கோப்புகளும், குறிப்புகளும். ஆனால், சுதந்திர இந்திய சரித்திரத்தின் கரும்புள்ளி என்று கருதப்படும் அவசரநிலைச் சட்ட காலத்து ஆவணங்கள் எதுவுமே காணப்படவில்லை என்கிற தகவல் அதிர்ச்சி அளிக்கிறதே...

அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள், அமைச்சரவை எடுக்கும் தீர்மானங்கள், ஆணைகள் என்று எல்லா கோப்புகளும் அந்தந்தத் துறையில் 25 ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது விதி. சில முக்கியமான ஆவணங்கள் 25 ஆண்டுகளுக்கு வெளியில் தெரியாமல் ரகசியக் கோப்புகளாகப் பாதுகாக்கப்படும். ஆனால், 25 ஆண்டுகள் கழிந்தால் எல்லா கோப்புகளும் ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதை மக்கள் பார்வைக்கு உள்படுத்தப்பட வேண்டும்.

எம்.ஜி. தேவசகாயம் என்பவர் இந்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி. இவர் அவசரநிலைச் சட்ட காலத்தில் சண்டீகரில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில விவரங்களைக் கேட்டிருந்தார்.பிரதமரின் அலுவலகத்திடம் இவர் எழுப்பியிருந்த 15 கேள்விகள் அவசரநிலைச் சட்டப் பிரகடனம் பற்றியது. அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் என்ன? மத்திய அமைச்சரவையால் அவசரநிலைப் பிரகடனம் செய்வது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டபோது கூடிய அமைச்சரவை உறுப்பினர்கள் யார், அந்தப் பிரகடனத்தின் பரிந்துரை என்ன, யாரால், எப்படி, எப்போது அமைச்சரவையின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமதுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது?அவசரநிலைச் சட்டம் தொடர்பாகப் பிரதமர் அலுவலகத்தில் யார், யார் ஏனைய துறைகளுக்கும், மாநில அரசுகளுக்கும் எப்படிச் செயல்பட வேண்டும், இன்னின்னாரைக் கைது செய்ய வேண்டும் என்கிற ஆணைகளைப் பிறப்பித்தனர். பத்திரிகைத் தணிக்கையை மேற்பார்வை பார்த்தது யார்? "மிசா' தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது யார்? "மிசா'வில் கைது செய்யப்பட்ட நபர்கள் யார், யார்? எல்லாவற்றுக்கும் மேலாக, அவசரநிலைச் சட்டம் தொடர்பான அத்தனை கோப்புகளும், அந்தக் கோப்புகளில் இருக்கும் குறிப்புகளும் உள்ளிட்ட எல்லா விவரங்களின் நகலும் தேவசகாயத்தால் பிரதமர் அலுவலகத்திடம் கோரப்பட்டிருந்தது.

சம்பவம் நடந்து 30 ஆண்டுகளாகிவிட்டதால், அவசரநிலைச் சட்டம் பற்றிய தகவல்களை இனியும் அரசு ரகசியங்களாகக் கருதப்பட முடியாது என்பதும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், தேவசகாயம் கோரிய தகவல்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதும்தானே நியாயம்? அப்படி அளிப்பதுதானே அரசின் வெளிப்படைத் தன்மைக்கு அடையாளம்? அதற்காகத்தானே தகவல் பெறும் உரிமைச் சட்டமே இயற்றப்பட்டது?

பிரதமர் அலுவலகம் தன்னிடம் அவசரநிலைச் சட்டம் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை என்று கூறி, அவசரநிலைச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேவசகாயம் கோரிய தகவல்களை அனுப்பியது. உள்துறை அமைச்சகமோ, தேவசகாயம் கோரியிருக்கும் தகவல்கள் 25 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அதனால் தங்களிடம் அவசரநிலைச் சட்டம் தொடர்பான கோப்புகளோ, தகவல்களோ இல்லை என்றும் பதில் அனுப்பி இருக்கிறது. ""1997-ம் ஆண்டு பொது ஆவணச் சட்டத்தின் 5-வது பிரிவின்படி, கோரப்பட்ட தகவல்களும், ஆவணங்களும் தேசிய ஆவணக் காப்பகத்தில் காணப்படும்'' என்று கூறி, அந்தப் பதிலின் நகலை தேசிய ஆவணக் காப்பகத்துக்கும் அனுப்பிவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து தேவசகாயத்துக்குப் பதில் கிடைத்திருக்கிறது. ""முதற்கட்ட ஆய்வில் நீங்கள் கோரியிருக்கும் தகவல்கள் எதுவும் எங்களிடம் காணப்படும் ஆவணங்களில் இல்லை. ஏனென்றால், அவசரநிலைச் சட்டப் பிரகடனம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு இதுவரை மாற்றப்படவில்லை'' என்பதுதான் பதில்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(3)-ன்படி எழுப்பப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காத தேவசகாயம், அதே சட்டத்தின் பிரிவு 18-ன் படி தலைமைத் தகவல் ஆணையருக்கு ஒரு புகார் அனுப்பியிருக்கிறார். என்ன பதில் வருகிறது, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும்.அவசரநிலைச் சட்டப் பிரகடனம் தொடர்பான கோப்புகளும், ஆவணங்களும் எங்கே? அதை வெளியிட விரும்பாமல் அதிகார வர்க்கமும் அரசும் சாக்குப்போக்குக் காட்டி மறைக்கப் பார்க்கின்றனவா, இல்லை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தொடங்கிப் பல அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மக்கள் மன்றத்தின் கேள்விகளுக்கு உள்ளாவார்கள் என்பதால் அந்த ஆவணங்களை அழித்தே விட்டார்களா? அழித்தது யார்?ஆவணங்கள் பாதுகாக்கப்படுவதில்லை என்றால் எதற்காகக் கோப்புகளும், குறிப்புகளும்? தகவல் பெறும் உரிமைச் சட்டமே வெறும் கண்துடைப்புத்தானா? அரசு தேவசகாயத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்!