Thursday, February 3, 2011

அய்யய்யோ! கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் "பகீர்'


பெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள் முரண்பட்டுள்ளன. இந்த கணக்குப் படி, ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை யில் நான்கு, "காணாமல்' போய்விட்டன.


பெரியநாயக்கன் பாளையம் அருகே நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். 2009ம் ஆண்டு நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தில், 20 கேள்விகளை கேட்டிருந்தார். அதில் கிடைத்த பதில் களில், ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள், முரண்பாடான தகவல்களை தெரிவித்திருந்தனர்.


நாயக்கன் பாளையம் ஊராட்சியில் குடிநீர் ஆதாரங்கள் குறித்த கேள்விக்கு பெரியநாயக்கன் பாளையம் பி.டி.ஓ., (கிராம ஊராட்சி), பொது தகவல் அலுவலர் ஆகியோர், 13 ஆழ்குழாய் கிணறுகள், 21 கைப்பம்பு, 21 மின் மோட்டார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


இதே கேள்விக்கு நாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவர், 17 ஆழ்குழாய் கிணறுகள், 16 கைப்பம்புகள், 18 மின் மோட்டார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதிகாரிகள் மற்றும் ஊராட்சித் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 4 ஆழ்குழாய் கிணறுகள், 5 கைப்பம்புகள், 3 மின் மோட்டார்கள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. நாயக்கன்பாளையம் சின்னராஜ் கூறியதாவது: சமுதாய பொறுப்பில் உள்ளவர்களின் இது போன்ற பதிலால், உண்மையான விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது.


நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மொத்த "டிவி'க்களின் எண்ணிக்கை 12 என அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். ஊராட்சித் தலைவர் ஆறு மட்டுமே உள்ளது என கூறியுள்ளார். மீதமுள்ள ஆறு "டிவி'க்கள் எங்கே போனது? பல கேள்விகளுக்கு பதில்கள் முரண்பாடாக உள்ளன.இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு சின்னராஜ் கூறினார்.

No comments:

Post a Comment