Sunday, January 10, 2010

வேளாண் அமைச்சக ஆவணங்களை பொது மக்கள் பார்க்க அனுமதி

மத்திய வேளாண் அமைச்சகம், அதன் பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அடிமட்ட நிலையில் உள்ள பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை பயனாளிகளுக்கு தெரிவிப்பதில் தயக்கம் இருக்கக்கூடும் என்பதால், அடிமட்ட நிலையில் ஆவணங்கள கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கு முக்கியதுத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வேளாண்-கூட்டுறவுத்துறை அமைச்சக செயலாளர் டி நந்தகுமார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமச் செயலாளர்களுக்கு அலுவல் ரீதியாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு, மாநில அரசுகள் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு திட்டம் குறித்தும், அதனை செயல்படுத்தும் அமைப்புகள் குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளின் அலுவலகங்களில் பயனாளிகள், சம்பந்தப்பட்ட அனைவரும் பார்ப்பதற்கும், நகல் எடுப்பதற்கும் வசதியாக வைக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தெரிவிப்பதற்கான ஒரு நடைமுறைய மாநில அரசில் உருவாக்க வேண்டும்.

இது தொடர்பாக, மாநில அரசுகள் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ஒரு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

நம்பகமான முறையிலும், வெளிப்படையான முறையிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைய அடிமட்ட நிலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வேளாண் துறையின் திட்டங்கள், மாநில அரசுகளின் துறைகள், சிறப்பு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. மாநில அளவிலான பல்வேறு செயல்படுத்தும் அமைப்புகளிடம் பயனாளிகளின் விவரங்கள் உள்ளன. எனவே, மாநில அரசின் செயல்படுத்தும் அமைப்புகள் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான இந்த நடைமுறைய சிறப்பாகவும், நல்ல முறையிலும் செயல்படுத்தலாம்.

திட்டச் செலவுகள், கிடைக்கும் மானியம், திட்டங்களின் பயனாளிகள் தொடர்பான விவரங்களை அனைத்து செயல்படுத்தும் அமைப்புகளும் தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டால், திட்டங்களின் செயல்பாடு மேலும் நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் அமையும்.

வேளாண்மையின் பல்வேறு துறைகள் மேம்பாட்டுக்காக, வேளாண்மை, கூட்டுறவுத்துறை மாநிலங்களுக்கு 23 திட்டங்களுக்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டங்களில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் பனை, பருப்பு வகைகள் மற்றும் சோளத்திற்கான ஒருங்கிணைந்த திட்டம், தேசிய தோட்டக்கலைத் திட்டம், பருத்தி, சணல் தொழில்நுட்பத் திட்டம் ஆகியவையும் அடங்கும் என்று கூறியுள்ளார்.


No comments:

Post a Comment