Tuesday, March 8, 2011

களப்பலியாகும் தகவல் உரிமைப் போராளிகள்!



தகவல் உரிமைச் சட்டம், ஊழலுக்கு எதிரான பேராயுதமாக வடிவெடுத்துள்ளது. ஏட்டளவில் இருக்கும் சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் எப்படி ஆளும் வர்க்கத்தால் நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன என்பதை தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி வெளிக்கொணர முடிந்தது. இப்படியாக, இந்தியாவின் பல பகுதிகளிலும் தகவல் உரிமைப் போராளிகள் உருவானார்கள். சமீபத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஊழல் எப்படி சிதைக்கிறது? என்பதை தகவல் உரிமைப் போராளிகள் வெளிக்கொணர்ந்தனர். ஆனால், அவர்கள் ஊழல் பேர்வழி மற்றும் சமூக விரோத கும்பல்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். இப்படி நேர்மைக்காக போராடுபவர்கள் கொல்லப்படுவது முதல் முறை அல்ல. மத்திய அரசோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக 35 வயது இளைஞர் நியாமத் அன்சாரி கொல்லப்பட்டார்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமலாக்கத்துக்கு வருவதில் உறுதியாக இருந்த தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜீன் டிரெஸ் ஸின் நெருங்கிய நண்பர் அன்சாரி. அவர்கள் முன்னாள் வங்கி அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த அமைப்பு வேலை உறுதித் திட்டத்தில் நியாயமான கூலியை உழைப்பாளர்கள் பெறுகின்றனரா? என்பதை கண்காணிக்கும் வேலையைச் செய்தது.

2009 இல், வேலையே செய்யாத 78 பேருக்கு, அரசு நிர்வாகத்தினர் கூலி கொடுத்திருப்பதை அறிந்த அவர்கள் மக்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். 2011 பிப்ரவரியில், ராணிகலா கிராம ஊராட்சியில் நடைபெற்ற ஊரக வேலை உறுதிச் சட்ட மோசடியை வெளிக்கொணர்ந்தார். அவர்களின் அறிக்கையை மைய
மாகக் கொண்டு, முக்கியக் குற்றவாளி கைலாஷ் சாஹுவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அவர் மானிகா கிராமத்தின் முன்னாள் பிடிஓ (வட்டார வளர்ச்சி அலுவலர்). அவரிடம் இருந்தும், அவரது கூட்டாளியான ராகலா கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்தும் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், சில தினங்களிலேயே அன்சாரி கொல்லப்பட்டார்.

ஆவணங்களில் பெயர் பதிவாகியிருந்த மேற்கண்ட இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுடைய மற்றுமொரு கூட்டாளி, ஷன்கர் டுபே என்ற ஒப்பந்ததாரர் இப்போதும் தண்டிக்கப்படவில்லை.இந்த நிலையில், மக்கள் நல அமைப்புகளின் பல்வேறு உறுப்பினர்களும், சமூக மற்றும் மனித உரிமைப் போராளிகள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து நியாமத் அன்சாரியின் நண்
பர் குர்ஜித் சிங், “அன்சாரியின் மரணம், தகவல் உரிமைப் போராளிகள் இந்த அரசின் கீழ் எத்தனை பாதுகாப்பற்று இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது” என்றார்.

கடந்த 2008 ஆம் இதே ஜார்க்கண்ட் மாநிலத்தில் லலித் மேதா என்ற போராளி கொல்லப்பட்டபோது அன்சாரியின் நண்பர் ஜீன் டிரெஸ், “இப்படியான செயல்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. ஜார்க்கண்டில் சமூக விரோத சக்திகளுக்கு எத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை நிலையை காட்டுகிறது” என்றார்.

மற்றொரு தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹார்ஸ் மந்தர் “இதுபோன்ற நிகழ்வுகள், நான் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்று ஒரு தனி மனிதன் சொல்வது எத்தனை ஆபத்தான விசயமாக இருக்கிறது” என்பதைக் காட்டுகிறது என்றார்.

தகவல் உரிமைப் போராளியான நிகில் தே, “சுயநல விருப்பங்களைத் தகர்க்கக் கொடிய ஆயுதமான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையை மக்கள் அடைந்திருக்கிறார்கள். ஆனால், சுயநல எண்ணங்களோ வன்முறை, குற்றவாளிகள் மற்றும் பணத்துடன் இணைந்து மேலும் வலிமையாகி இருக்கிறது. ஒவ்வொரு தகவல் உரிமைப் போராளியும் ஊழலுக்கு எதிராக முக்கிய அடியை எடுத்து வைக்கிறார் என்ற வகையில் பாராட்டுக்கு உரியவரே. தகவல் உரிமைச் சட்டம், இந்த போராளிகளைப் பாதுகாக்கவும் வழி வகை செய்யும் விதத்தில் திருத்தம் கொண்டு வரவேண் டும்” என்றார்.

அனிஸ் வனாய்க் என்ற ஆய்வாளர், கடந்த ஆண்டுகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மட்டும் 11 மாநிலங்களில் 40 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக கூறுகிறார். தகவல் உரிமைப் போராளிகளை பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தத்தை கொணர வேண்டுமென்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் 2010 ஆகஸ்டில், அமைச்சரவை இப்படியான சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்தது.

ஆனால், அடிப்படையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தையே நீர்த்து போக செய்யும் வேலையும் இந்த திருத்தத்தில் இருப்பதை நாம் கவனிக்க தவறக்கூடாது என தகவல் பெறும் உரிமை போராளிகள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக தகவல் கேட்பவர்கள் ஒரு பொருள் குறித்து மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகவல்களை திரட்ட ஆகும் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களும் இதற்குள் இருக்கிறது என்கின்றனர். சட்டத்தின் உயிர்நாதமாக விளங்கும் முக்கிய சரத்துகளை நீக்கி விட்டு, போராளிகளைப் பாதுகாப்பது குறித்த திருத்தமும் இருக்கிறது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆகவே மத்திய அரசு தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் திருத்தங்களை கைவிட்டு, தகவல் பெறும் உரிமை போராளிகளை பாதுகாக்கும் திருத்தத்தை உறுதியாக கொண்டுவருவதே தகவல் பெறும் உரிமை சட்டம் உயிரோட்டமாக இருப்பதற்கு உதவி செய்யும்.

No comments:

Post a Comment