Monday, October 17, 2011

தகவல் அறியும் உரிமைச் சட்டம்: மறு ஆய்வு இல்லை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் எந்தத் திட்டமும் இல்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெளிவுபடுத்தினார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறு ஆய்வு செய்யும் திட்டம் ஏதுமில்லை. இந்தச் சட்டம் தொடர்பான அனுபவங்களை இப்போது கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். சில காலத்துக்குப் பிறகு, அனுபவம், தேவை மற்றும் கருத்தொற்றுமையின் அடிப்படையில் நாம் சில மாற்றங்களைச் செய்யலாம். இவையெல்லாம் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இவை குறித்து இப்போதே நான் எதுவும் கூற இயலாது.

 இந்தச் சட்டத்தினால் அரசு மட்டுமல்ல, நீதித்துறையும் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.


 அமைச்சர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ரகசியக் காப்புப் பிரமாணமும் சேர்த்து எடுத்துக் கொள்கின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது. ரகசியத்தை ஒரு குமாஸ்தா மூலம் அறிந்துகொள்ள முடியுமெனில், நாம் ரகசிய காப்புப் பிரமாணத்தை மாற்ற வேண்டியதுதான். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில விஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டியது அவசியம்.

 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரவேண்டுமா என்று என்னைக் கேட்டால், 'தேவையில்லை' என்றுதான் நான் கூறுவேன்.

 எந்தச் சட்டத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை விரிவு படுத்த வேண்டுமெனில் விரிவுபடுத்தலாம்: மேலும் ஆழமாக்க வேண்டுமெனில் ஆழப்படுத்தலாம்: விதிவிலக்குகள் தரவேண்டுமெனில், விதிவிலக்கு தரலாம். தற்போது இச்சட்டத்திலிருந்து சிபிஐக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது.

 உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் இச்சட்டத்தால் கேள்வி கேட்கப்படுகின்றன. ஏன் குறிப்பிட்ட நீதிபதி மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்? மற்றவருக்கு ஏன் அத்தகைய வாய்ப்பு தரப்படவில்லை? என்பது போன்ற கேள்விகளும் இச்சட்டத்தின் உதவியால் எழுப்பப்படுகின்றன என்றார் சல்மான் குர்ஷித்

No comments:

Post a Comment