Tuesday, September 18, 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் : முடக்க முயற்சி


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வரவேற்கத்தக்க சில புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

கவல் அறியும் உரிமைச் சட்டம், 68 நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும் இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள்தான் மிகச் சிறந்தவை என்று கூறப்படுகிறது. இதன்படி யார் வேண்டுமானாலும் எந்தத் தகவலையும் அரசிடம் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யவோ, எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடவோ, எந்த நகலையும் இச்சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவோ முடியும்.

இப்படிப்பட்ட சட்டத்திற்கு வேட்டு வைப்பதுபோல் 10-12-2010ம் தேதி சில திருத்தங்கள்  வர இருந்தது. ஒரு தகவல் விண்ணப்பத்தில் ஒரே பொருள் பற்றிய தகவல்கள்தான் கேட்க வேண்டும். ஒரு விண்ணப்பத்தில் 250 வார்த்தைகளுக்கு மேல் எழுதப்பட்டிருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் விருப்பப்பட்டால் விசாரணையின்போது தனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 10க்கும் மேற்பட்ட அஞ்சல் செலவை மனுதாரரே ஏற்க வேண்டும் போன்ற திருத்தங்களை உற்றுக் கவனித்த மக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டமே இதனால் பயனற்றதாகிவிடும் என்று இதனை எதிர்த்துப் போராடினர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் வருவதற்குக் காரணமாக இருந்த இடதுசாரிகட்சிகளின் எதிர்ப்பு , பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அருணாராய் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழுவில் மக்களின் உணர்வுகள் குறித்தும் புதிதாகக் கொண்டுவரப் படவுள்ள மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  இதனால் இந்தச் சட்டத்தின் நோக்கமே சிதைந்துவிடும் என்று மத்திய அரசுக்குஅக்குழு பரிந்துரை செய்தது.  மாற்றுத்திருத்தங்களையும் முன் வைத்தது. இதனையொட்டி தற்போது மத்திய அரசு 31-07-2012 அறிக்கையில் சில ஆரோக்கியமான புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தற்போது வந்திருக்கும் மாற்றங்கள்:

  • பிரிவு 3: தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பம் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இது அரசியல் சட்டத்திற்கே எதிரானது  இருப்பினும் இதைக் காரணம் கூறி விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்யக்கூடாது.

  • பிரிவு 4 (எ): ஆவணங்களை அனுப்புவதற்கு 50க்கும் மேல் அஞ்சல் செலவானால் அதற்கு மேற்பட்டதை மனுதாரரே ஏற்க வேண்டும்.இதுவும் சட்டத்தை முடக்கும் முயற்சி நிலக்கறி ஊழலில் 1.83லட்சம்கோடி கொள்ளை அடிப்பவர்கள் இதற்கு செலவு செய்யமாட்டார்களாம்.

  • பிரிவு 5: வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் அதற்கான சான்றிதழை விண்ணப்பத்தோடு இணைக்கவேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பக் கட்டணம், தகவல்களுக்கான கூடுதல் கட்டணம் அனைத்தையும் செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் 25,000  ரூபாய்க்குக் கீழ் இருப்பவர்களே வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள்.

  • பிரிவு 10(1)ல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் மேல்முறையீடுகள் மீது நடவடிக்கை தொடர்வதற்கு தகுதியற்றவை எனக் கருதப்பட்டாலும் அந்த மேல் முறையீட்டினை தள்ளுபடி செய்யும் முன்பாக விண்ணப்பதாரர் தனது தரப்பினை எடுத்துச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும். பிரிவு 10(2)ல் உரிய படிவத்தில் அனுப்பப்படவில்லை என்ற காரணத்திற்காக மேல் முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படக் கூடாது. பிரிவு 10(3)(ஆ)ல் முதல் மேல்முறையீடு தீர்வு செய்யப்பட 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, பிரிவு 10(4)ல் முதல் மேல்முறையீடு அலுவலரையும் ஆணையம் அழைத்து விசாரிக்க அனுமதித்துள்ளது. பிரிவு 10(6)ல் முதல் மேல்முறையீடு அலுவலரிடமும் சாட்சியம் பதிவு செய்ய ஆணையம் கோரலாம்.

  • பிரிவு 12(1)ல் மேல்முறையீடு விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இடைவெளி இருக்குமாறு ஆணையம் அறிவிப்பு அனுப்ப வேண்டும். பிரிவு 12(3)ல் முதல் விசாரணைத் தேதியில் விண்ணப்பதாரர் வர இயலாத காரணங்கள் குறித்து ஆணையம் திருப்தியடைந்தால் இறுதி ஆணைகள் பிறப்பிப்பதற்கு முன் மனுதாரருக்கு மற்றுமோர் வாய்ப்பு அளிக்கலாம்.

  • பிரிவு 14: ஆணையம் தனது அறிவிப்புகளை மனுதாரர் மூலமாக, உரிய அலுவலர் மூலமாக, பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டை மூலமாக, மின்னஞ்சல் உள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்று திருத்தம் வந்துள்ளது.

- புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள இத்தகைய திருத்தங்கள் இச்சட்டத்திற்கு வலிமை கூட்டுவதாக இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இதனைப்  பயனுள்ள திருத்தங்கள் என்று பாராட்டுகிறார்கள்.

தகவல் அறியும் சட்டவிண்ணப்பங்கள்  500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்ற திருத்தம் விண்ணப்பதாரர் கேட்க வந்ததை சுருக்கமாக, அதே சமயம் தெளிவாக,துல்லியமாகக் கேட்க வரையறுக்கப் பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் இந்தச் சட்டத்தின் ஆர்வலர்கள்.

முன்னாள் மத்திய தகவல் ஆணையரும், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலருமான சைலேஷ் காந்தி கூறுகையில், "சில விண்ணப்பதாரர்கள் ஒரே தகவலைப் பெற பல கேள்விகளைக் கேட்பதுண்டு. ஒவ்வொரு கேள்வியும் கவனமாக, அதே சமயம் சிறப்பாக கேட்கப்பட வேண்டும். ஒரே பதிலைத் தரக் கூடிய பல கேள்விகளைக் கேட்பதற்கோ, ஒரே பொருள் தரக்கூடிய கேள்விகளை மற்றுமொரு விண்ணப்பமாக அனுப்பவோ எந்தத் தடையும் இல்லை" என்கிறார்.

இந்தியாவிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அதிகம் பயன்படுத்துவது தமிழகம்தான் என்பது வரவேற்கத்தகுந்த விஷயம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் வருவதற்கு காரணமாக இருந்தவர்களுள் முக்கியமானவரான அருணாராய் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காகப்  பல போராட்டங்களையும், விவாதங்களையும் முன் வைத்தவர்.ஆயினும் இன்னும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பல இடங்களில் அரசு அலுவலர்களையும், மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயம். இந்த நிலையில் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் இந்தச் சட்டத்தை இன்னும் சாமானியர்களின் கரங்களுக்கும் கொண்டுசெல்லும் என்று நம்பலாம்.

No comments:

Post a Comment