Tuesday, April 2, 2013

பிரபுல் படேலுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கை விபரம் வெளியிட வேண்டும்: சி.வி.சி.,க்கு உத்தரவு

 " சிவில் விமான போக்குவரத்து துறையை கவனித்தவரும், தற்போதைய, கனரக தொழில்கள் துறை அமைச்சருமான பிரபுல் படேலுக்கு எதிராக, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர், சுனில் அரோரா தெரிவித்த புகார் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்' என, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை, முதன்மை தகவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக, தேசியவாத காங்கிரசை சேர்ந்த பிரபுல் படேல் இருந்த போது, முறைகேடுகள் நடந்ததாக, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த சுனில் அரோரா பிரச்னை கிளப்பியிருந்தார். இது குறித்து, கேபினட் செயலர், பி.கே.சதுர்வேதிக்கு, அரோரா கடிதம் எழுதியிருந்தார் இந்த பிரச்னை குறித்து, விசாரிக்கும்படி, சி.வி.சி., என்ற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம், லோக்சபா உறுப்பினர்களான, பிரபோத் பன்டா -- இந்திய கம்யூ மற்றும் நிஷிகாந்த் துபே - பா.ஜ., ஆகியோர் கோரியிருந்தனர். இந்த எம்.பி.,க்கள் மனு மீது ,என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மனு செய்தார். இதற்கு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், பதில் அளிக்க மறுத்துவிட்டது. இந்த விவகாரம், மீண்டும் முதன்மை தகவல் ஆணையர் வசம் வந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த முதன்மை தகவல் ஆணையர், சத்தியானந்தா மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கேபினட் செயலருக்கு, அரோரா எழுதிய கடிதம் மற்றும் கேபினட் செயலரிடம் இருந்து வந்த தகவலை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில், பிரபுல் படேலுக்கு எதிரான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்.இதில், அரோராவின் புகார் பற்றி வெளியிடதேவையில்லை. பொது நலன் கருதி, எம்.பி.க்கள் கோரியுள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும், அதன் தொடர் நடவடிக்கை விபரங்களையும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிரபுல் படேல் இருந்தபோது, ஏர் இந்தியாவுக்கு, தேவையான போயிங் விமானங்கள் வாங்க, அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, எம்.பி.,க்கள் பிரபோத் பன்டாவும், நிஷிகாந்த் துபேயும் புகார் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

No comments:

Post a Comment