Sunday, January 3, 2010

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005

தகவல் அறியும் உரிமை

இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு வலுச் சேர்க்கும் விதமாக கடந்த 2005ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அரசு மற்று அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும்.

இங்கு தகவல் என்பது பலதரப்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. அதாவது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், }மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே 'தகவல்' என்ற பிரிவின்கீழ் வைக்கப்படுகின்றன.

அரசுத்துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால், அதைக்கூடக் கேட்டுப் பெற முடியும். எடுத்துக்காட்டாக. ஒரு தனியார் நிறுவனத்தின் ஆண்டுக் கணக்கு, இயக்குனர் குழுமம் உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டுமானால், கம்பெனிகளுக்கான பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்யலாம். இதேபோல், அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிப் பெற முடியும்.

தகவல்களைப் பெறுவது நமக்கு எந்தவகையில் உதவும் என்று கேள்வி எழலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதால், அரசு நிர்வாகத்தால், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கிறது. இதனால், லஞ்சமும் ஊழலும் குறைகின்றன.

அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் தகவல்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஏதாவது குறைகள் இருப்பின் அதைக் களைய வேண்டும் என்ற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் ஜனநாயகத்தில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள வழி ஏற்படுகிறது.

தகவல் பெறும் உரிமைச்சட்டம், 2005

மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இந்த நோக்கத்தை எய்துவதற்கும், குடிமக்கள் ஒவ்வொருவரும், அரசு(அல்லது) அரசு சார்ந்த அலவலகங்களிடமிருந்து தகவல் பெறுவதற்கும் ஏதுவாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

தற்போது,தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005-ஐ, ஐம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், அக்டோபர் மாதம் 2005-ல் முழுமையாக நடைமுறைப்படுத்த, மத்திய அரசால் சட்டம் வெளியிடப் பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் உரிமையை அடிப்படை உரிமையாக மக்களுக்கு வழங்கும் வகையில் இச்சட்டம் உள்ளது. எனவே அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல் திறனிலும், வெளிப்படையான நிலை, செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல் மற்றும் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலங்களின் கட்டுப்பாட்டிலுள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொ்ள வழி செய்யும் சட்டமே தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 ஆகும். 2005 ஆம் ஆண்டின் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கண்காணித்தல் மற்றும் செயலாக்கம் தொடர்பான பொருள் பொதுத்துறையிலிருந்து, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறைக்கு அரசாணை நிலை எண்.1365, நாள். 21.11.2006ன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. இத்துறையில், தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் செயலாக்கம் மற்றும் நிருவாகம், அதன் தொடர்புடைய அறிவுரைகள்,

ஆணைகள், விளக்கங்கள் வழங்கப்படுகின்றன. இச்சட்டம் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அல்லது தெளிவுரை வேண்டின் பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை (நி.சீ.3) என்ற பிரிவிலிருந்து உரிய தகவலைப்பெறலாம். பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறையின் சிறப்பு ஆணையாளர் மற்றும் அரசு செயலாளர் அவர்கள் இச்சட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் ஆவார். இச்சட்டத்தின் கண்காணித்தல் மற்றும் செயலாக்கத்திற்காக துணைச்செயலாளர் (த.பெ.உ.ச.) மற்றும் சார்புச்செயலாளர் (த.பெ.உ.ச.) ஆகியோர் தனியே நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தின் நோக்கங்கள்:

* அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்;

* அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.

* அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை

* ஊழலை ஒழித்தல்

* அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

மாநில தகவல் ஆணையம்:

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15ன்படி, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் 07.10.2005 முதல் இயங்கி வருகிறது.

பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலர் நியமனம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு (1)ன்படி, தகவலுக்காக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு,

தகவல் அளிக்க ஏதுவாக, ஒவ்வொரு அலுவலகங்களிலும், பொது தகவல் அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். மேலும் உட்பிரிவு 2ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல் முறையீடுகளைப் பெற்று, அவற்றை பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். (தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் தகவல் பெறுவதற்காக பொது தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், நிகரி எண் போன்றவைகள் தரப்பட்டுள்ளன.

தகவல் பெறுவதற்குச் செய்ய வேண்டிய நடைமுறை

தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6ன்படி, தகவல் பெற விரும்பும் நபர், ஆங்கிலம் அல்லது தமிழ்மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான இன்றைய கட்டணமான ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) பணமாகவோ வரைவோலையாகவோ அல்லது அரசு கருவூல சீட்டு மூலமாகவோ, அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தன்னால் கோரப்படும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாதவிடத்து, அதனை எழுத்து வடிவில் கொணர்ந்திட தகுந்த, எல்லா உதவிகளையும் பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர் செய்திட வேண்டும்

தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடமிருந்து அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் கூடாது. மேலும், அவரை தொடர்பு கொள்வதற்காக தேவையான விவரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் தகவல் பெற விரும்புபவர்களிடமிருந்து கோருதல் கூடாது. ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிறவிடத்து, அந்தத் தகவல்; (அ) பிரிதொரு அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக; அல்லது அதன் உறு பொருள் பிறிதொரு அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற் பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்குமிடத்து, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து, அத்தகைய மாற்றல் குறித்து விண்ணப்பதாரருக்கு உடனடியாக தெரிவிக்கப்படல் வேண்டும். இதனை இயன்ற அளவு விரைவாக செய்திடல் வேண்டும். எந்நேர்விலும் அந்த விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குமிகைபடாமல் செய்யப்படவேண்டும்.


5 comments:

ராசேசு said...

மிகவும் பயனுள்ள தகவல்

நன்றி

ராசேசு

விடுதலை said...

தங்கள் கருத்துக்கு நன்றி

VU2WDP said...

தனி நபர் பெற்ற ஓய்வூதியம் பற்றி தகவல் உரிமை சட்டப்படி கேட்க முடியுமா ? யாராவது தெரிந்தால் பதில் அளிக்கவும்

TMMK NAGAI SOUTH said...

இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் கேஸ் பெற பதிவு செய்ய முடியும் எனவும் மற்றவர்கள் ஒரு மாதத்தில் பதிவு செய்யலாம் என ஏஜென்சியினர் கூறுகிறார்களே இது சரியா என தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும்

Unknown said...

தபால் நிலையத்திற்கான தகவல் யாரிடம் பொறுவது

Post a Comment