Saturday, February 27, 2010

தகவல் உரிமைச் சட்டம்: புலியைப் பூனையாக்கி...

பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சிவப்பு நிற அரசு எண்ணெய் நிறுவனத்திலிருந்து ஒரு தகவலைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்காக நகல் கட்டணமாக ரூ.100ம் சேர்த்து அனுப்பியிருந்தார். இதைப் பார்த்த ஆயில் நிறுவன தகவல் அதிகாரி, 40 பக்க நகலுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.10 வீதம் ரூ.400 அனுப்ப வேண்டும் என பதில் எழுதினார்.

நம்மவர், மிரளவில்லை. கட்டண விதிமுறையைக் காட்டி, ஒருபக்கத்துக்கு ரூ.2 போதும் என மற்றொரு கடிதம் எழுதினார். அந்த அதிகாரிகள் நம்மவரை இழுத்தடிக்க நினைத்தார்கள் போலும். ரூ. 400 கொடுத்தால்தான் தகவல். இல்லையென்றால் முடியாது எனப் பிடிவாதமாகச் சொல்லி விட்டார்கள்.

நம்மவர், தில்லியிலுள்ள தலைமைத் தகவல் ஆணையரிடம் முறையிட்டார். ஆயில் நிறுவன அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணை நடந்து முடிந்து. ஏற்கெனவே செலுத்தப்பட்ட கட்டணத்தில் தகவல் நகலைக் கொடுக்கும்படி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. நம்மவருக்கு கேட்ட தகவல் உரிய கட்டணத்தில் கிடைத்தது.

கதை முடிந்துவிடவில்லை....

வழக்கு நடந்தபோது, தில்லிக்கும் சண்டீகருக்கும் ஆயில் நிறுவன அதிகாரிகள் வந்து போன செலவு எவ்வளவு எனக் கேட்டு இன்னொரு மனுவை அனுப்பினார். பதில் வந்தது. பலமுறை விமானத்தில் சென்று வந்ததற்கு சில லட்சங்கள் வரை செலவாகிவிட்டதாக. முன்னூறு ரூபாய் கட்டணத்துக்காக செலவிடப்பட்டது லட்சக் கணக்கில். எல்லாம் அரசுப் பணம். மக்கள் பணம்.

பல சமயங்களில் அரசு நிர்வாகத்தின் இதுபோன்ற அவலட்சணங்களை தகவல் சட்டம் வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறது.

மன்மோகன் அரசின் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுவது இந்தச் சட்டம். இந்தச் சட்டப்படி, அரசு வேலைகளைக் கண்காணிக்கலாம், ஆவணங்களைச் சரிபார்க்கலாம், அலுவலகங்களைச் சோதனையிடலாம். அதெப்படி, இப்படியொரு சட்டத்தை நமது அரசியல்வாதிகள் அனுமதித்தார்கள். தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக் கொண்டதெப்படி? அவர்கள் சிக்கிக்கொள்ள அவர்களே வலை தயாரித்தது ஏன் என்பன போன்ற சந்தேகங்களெல்லாம் நமக்கு உண்டு.

தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அவ்வப்போது, இந்தச் சட்டம் அரசியல்வாதிகளை அவ்வப்போது சீண்டத் தவறியதில்லை. பார்த்தார்கள், அந்தச் சட்டத்தின் கொடுக்குகளையெல்லாம் பிய்த்தெறியத் தொடங்கிவிட்டார்கள்.

சட்டத்திலிருந்து விலக்களிக்கிறேன் என்று கூறி, எங்கெல்லாம் ஊழல் நடக்கச் சாத்தியமோ அங்கெல்லாம், தகவல் சட்டத்துக்கு வேலையில்லை என்று கூறிவிட்டார்கள். இவர்களது கணக்குப்படி, பிரதமர் அலுவலக நடவடிக்கைகள், அமைச்சர்களின் சொத்து விவரம் போன்றவை மக்கள் தெரிந்துகொள் அவசியமில்லாதவை. இப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளையும் இந்த விலக்குப் பட்டியலில் சேர்த்துவிட முனைத்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் தவிர வேறு யாரால் பெரிய ஊழலைச் செய்ய முடியும் எனத் தெரியவில்லை.

போகிற போக்கைப் பார்த்தால், பள்ளிக்கூடங்களை மட்டும்தான் சோதனையிட முடியும். ஸ்கூல் வாத்தியார் லஞ்சம் வாங்குகிறாரா என்று மட்டும்தான் நம்மால் கண்காணிக்க முடியும் போலிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குகிறது என்பதை இந்த விலக்குப் பட்டியலைப் பார்த்தாலே சொல்லிவிட முடியும்.

இந்தப் பதிவில் நான் எந்த மாநிலத்தையும் குறை சொல்ல முனையவில்லை. ஆனால், இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் இந்த விலக்குப் பட்டியல் வழியாக ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களெல்லாம் நேர்மையாகச் செயல்படத் துணிந்திருக்கின்றன என்று தெரியும்.