Tuesday, December 18, 2012

சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை

இந்தியாவில், சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை; அதற்கு எடுத்துக்காட்டு, திருவண்ணாமலையில், சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டது என, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பலர், வேதனை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையில், சமூக சேவகரான ராஜ்மோகன், கடந்த 2ம் தேதி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சமூக சேவையில் ஈடுபடும் பொதுநல ஆர்வலர் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பல்வேறு முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தவரான, ஆவடி தரணிதரன் கூறுகையில், ""ராஜ்மோகன் படுகொலை செய்யப்பட்டது, இந்தியாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. இச்சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தை சீர் குலைப்பதற்கு தொடர்ந்து சதி நடந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.

தொடரும் உயிர் பலி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, இன்று வரை, 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடக்கம். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பல்வேறு கேள்விகள் கேட்டதால், 

கடுமையாக தாக்கப்பட்டவரான சந்தானம் கூறியதாவது: இந்தியாவில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே, தகவல் அறியும் ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது, அரசின் கடமை. அரசு கொடுத்த உரிமையை, நாங்கள் பயன்படுத்துகிறோம். அது, தவறு செய்கிறவர்களுக்கு பாதகமாக அமைந்தால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவில், அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் நம்ப முடியாது. துப்பாக்கியின் இரண்டு குழல்கள் அவர்கள். எனவே, பொதுமக்களுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர்களை, பொதுமக்களே பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரண நிதி: பாதுகாப்பு வழங்குவது குறித்து, பல்வேறு ஆர்வலர்கள் கூறியதாவது: சமூக ஆர்வலர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்த அச்சுறுத்தல் வந்தாலும், இதுகுறித்து தீவிர விசாரணை வேண்டும். குறிப்பாக, அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தகவல் கேட்பவரால் யாரெல்லாம் பாதிப்படுகின்றனர் என்பதை அறிய வேண்டும். சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகன் குடும்பத்திற்கு, நிவாரண நிதி வழங்க வேண்டும்; தனிமையில் இருக்கும் அவருடைய மனைவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தகவல் அறியும் ஆர்வலர் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

ஆமதாபாத்: குஜராத்தில் தகவல் அறியும் ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமித்ஜேத்வா. தகவல் அறியும் உரிசை சட்ட ஆர்வலர், இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம், குஜராத், செளராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள ஆசிய சிங்கங்கங்களின் சரணாலயமான கிர் காடுகளில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடந்து வருவதாகவும், இதில் அம்மாநில பா.ஜ. எம்.பி. டினு சோலங்கி என்பவருக்கும் தொடர்பிருப்பதாகவும்,இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு தொடர்ந்த சில நாட்களில் (ஜூலை 20-ம் தேதி 2010) அவர் ஐகோர்ட் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் எம்.பி. உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பா.ஜ. எம்.பி. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் அமித் ஜேத்வா தந்தை தனக்கு நியாயம் கிடைக்க கோரி ஆமதாபாத் ஐகோர்ட்டில் அமித்ஜேத்வா கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க‌ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச்,. மனு ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.