Monday, June 16, 2014

"தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகளுக்கான காரணங்களை வெளியிட முடியாது'

தீர்ப்புகளுக்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரவீந்தர் ராஜ் என்ற சமூக ஆர்வலர், உச்ச நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அதிகாரியிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருந்தார்.
அதில், "விசாரணை ஏதும் நடத்தப்படாமலும், எந்தக் காரணமும் கூறப்படாமலும், மறுசீராய்வு மனுக்கள் மீது நீதிமன்றங்கள் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றன. அந்த உத்தரவுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்ற தகவலை வழங்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
அந்தத் தகவலை வழங்க தகவல் அதிகாரி மறுத்து விட்டார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு அதிகாரியிடம் ரவீந்தர் ராஜ் முறையீடு செய்தார்.
அவரது மனுவை மேல்முறையீட்டு அதிகாரி தள்ளுபடி செய்து, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கண்ணபுரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "ஒரு நீதிபதி, தான் அளிக்கும் தீர்ப்பு மற்றும் பிறப்பிக்கும் உத்தரவின் மூலம்தான் பேசுகிறார். சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிபதி, ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு ஏன் வந்தார், அதற்கு என்ன காரணம் என்ற விவரத்தை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோர யாரையும் அனுமதிக்க இயலாது' என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தற்போது தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்டுள்ள மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று அந்த உத்தரவில் மேல்முறையீட்டு அதிகாரி கூறினார்.