மத்திய அரசில் அதிக சொத்து உள்ள அமைச்சர்கள் பட்டியலில் பிரபுல்படேல் முதலிடத்திலும் அதையடுத்து ஜோதிராவ் சிந்தியாவும் உள்ளனர். இந்த இருவருக்கும்
ரூ.25 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ரூ.10.5 கோடி சொத்து உள்ளது.
மத்திய அரசில் உள்ள அமைச்சர்களின் சொத்து பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் வரிசையில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சரான பிரபுல்படேல் முதலிடத்தில் உள்ளார். அவரது பெயரில் ரூ.29.62 கோடி சொத்து உள்ளது. அவரது மனைவி வர்ஷா படேல் பெயரில் ரூ.37.7 கோடி சொத்து உள்ளது.
இந்த தம்பதிக்கு ரூ.18லட்சத்திற்கான பணம் பல்வேறு வங்கி கணக்குகளில் உள்ளன. இதைத் தவிர அமைச்சர் படேலின் பெயரில் ரூ.67 லட்சத்திற்கு நகைகள் உள்ளன. அவரது மனைவி நகைகள் மதிப்பு ரூ.1.3 கோடியாகும்.
இவரது மகனுக்கு ரூ.1.3 கோடி மதிப்பில் நகைகள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பிரபுல் படேலின் சொத்து மதிப்பு இதுவாகும். அமைச்சர் தனக்கோ அல்லது தனது குடும்பத்தினர் வசம் உள்ள வாகனங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.
இவரையடுத்து சொத்து மதிப்பில் 2ம் நிலையில் உள்ள வர்த்தக துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஏறக்குறைய ரூ.25 கோடி சொத்துக்கள் உள்ளன. இவருக்கு ரூ.5.7 கோடிக்கு மேல் நகைகள் உள்ளன. இவர் இந்திய மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களில் ரூ.16 கோடி மதிப்பில் முதலீடு செய்துள்ளார். நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பெயரில் ரூ.1 கோடி வரை சொத்து உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.1.6 கோடிக்கு சொத்து உள்ளது.
வேளாண் துறை அமைச்சர் சரத் பவாருக்கு ரூ.6.5 கோடி சொத்து உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ரூ.10.5கோடி சொத்து உள்ளது. அவரது மனைவி நளினிக்கு ரூ.8.5 கோடி மதிப்பு சொத்து உள்ளது. ப.சிதம்பரத்திற்கு கர்நாடகத்தில் உள்ள குடகு பகுதியில் ரூ.28.9 லட்சம் மதிப்புள்ள காபி எஸ்டேட் உள்ளது. ப.சிதம்பரம் வைத்திருக்கும் தொலைபேசி மதிப்பு ரூ.38 ஆயிரம் ஆகும். அவரது மனைவி தொலைபேசியின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தமது பெயரில் ரூ.1லட்சம் சொத்து இருப்பதாக கூறியுள்ளார். அவரது மனைவி எலிசபெத் பெயரில் ரூ.15லட்சம் மதிப்புள்ள வீடும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிலம் மற்றும் வங்கி கணக்கு களில் ரூ.3.19 லட்சம் பணம் உள்ளது. ஏ.கே. அந்தோணி மாநிலங் களவை உறுப்பினராக உள்ளார்.
மத்திய அமைச்சர்கள் சொத்து விவரம் குறித்து, சமூக ஆர்வலர் எஸ்.சி.அகர்வால் தகவல் உரிமை சட்டத்தில் கேட்ட போது பிரதமர் அலுவலகம், அமைச்சர்களின் இந்த சொத்து விவரங்களை வெளியிட்டது.