Friday, October 15, 2010

மருத்துவக்கல்லூரி பணிநியமனங்களில் முறைகேடு ஆளுநர் மாளிகை, அமைச்சர் தலையீடு அம்பலமானது

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் நியமனத்தில் உயர் மட்ட அரசியல் தலையீடுகள் இருந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி, ஆளுநர் மாளிகை மற்றும் சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் அலுவலகம் போன்றவை சில குறிப்பிட்ட விண்ணப்ப தாரர்கள் பயன்பெறுமாறு தங்கள் செல் வாக்கைப் பயன்படுத்தியுள்ளன என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, கவுரவ வேந்த ரான சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மற்றும் தேர்வுக்குழுவின் தலைவரான கே. மீர் முஸ்தபா ஹூசைன் ஆகியோர் தங் களது செல்வாக்கினைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 4, 2008 அன்று எம். சாந்தி என் பவரின் விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. அந்த விண்ணப்பத்தில் “மாண்பு மிகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுகாதாரம் மற்றும் குடும்ப சுகாதாரம் பரிந் துரைக்கப்பட்டு முன்மொழியப்பட்ட” என்று பச்சை மையினால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் கழிந்த பின்னர், சாந்தி, பல்கலைக் கழக மானியக்குழு ஒருங்கிணைப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டார். இந்த விஷயத் தில் விநோதமாக சாந்தியின் பணிநியமன ஆணை சாந்தியின் முகவரிக்கு அனுப்பப்படா மல் சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவல கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கடி தத்தை “முறைப்படி” கையெழுத்திட்டு சுகா தாரத்துறை அமைச்சரின் உதவியாளர் சண் முகம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதே போன்று, சித்த மருத்துவத் துறை யில் ரீடர் வேலைக்கு டாக்டர் கே.எஸ். உமா வின் விண்ணப்பம் நவம்பர் 21, 2008ல் பெறப் பட்டுள்ளது. டாக்டர் கே.எஸ். உமாவின் விண்ணப்பத்தில் பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட குறிப்பு பின்வருமாறு தெரிவிக்கிறது. “ஆளுநர் மாளிகையிலிருந்து தொலைபேசி மூலம் டாக்டர் கே. எஸ்.உமாவின் விண்ணப்பத்தை ரீடர் பதவிக்கு பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது”. இதைத்தொடர்ந்து துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் தலைமையில் ஜனவரி மாதம் 19ம் தேதி கூடிய தேர்வுக் குழு டாக்டர் கே. எஸ். உமாவை ரீடர் பதவியில் நிய மித்து உத்தரவிட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஆகஸ்ட் 21, 2007 பல்கலைக் கழக தேர்வுக் குழு, சித்த மருத் துவத் துறை விரிவுரையாளர் பணியிடத் திற்கு டாக்டர் ராஜலட்சுமியைப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை 2007 செப்டம்பர் 21ம் தேதி நிர்வாகக் குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிறிதுகாலம் கழிந்த பின்னர் டாக்டர் ராஜலட்சுமியின் விண்ணப்பம் காத் திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. அப்பணியிடத்திற்கு டாக்டர் இ. மணி கண்டன் பரிந்துரைக்கப்பட்டார். அதன்பின் னர் புதிதாக ஒரு லெக்சரர் பணியிடம் உரு வாக்கப்பட்டு டாக்டர் ராஜலட்சுமி பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணியிடத்திற்கு விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.

ஆதாரங்களோடு பல்கலைக்கழகத் தைத் தொடர்புகொண்டபோது பல்கலைக் கழக அதிகாரிகள் தற்காத்துக்கொள்ளும் விதமாக அனைத்துப் பணியிடங்களும் தகுதியின் அடிப்படையிலேயே நிரப்பப்பட் டது என்று சமாளித்தனர். அனைத்து நடை முறைகளையும் முடித்த பின்னரே பணிகள் நியமனம் செய்யப்பட்டன என்று மூத்த பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார். எனினும், அவரது கூற்றுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.

ஆகஸ்ட் 4, 2008ல் எம். சாந்தி அனுப்பிய விண்ணப்பத்தில் எந்தப்பணியிடத் திற்கான விண்ணப்பம் என்பது குறிப்பிடப் படவில்லை. விண்ணப்பம் பெற்று ஒரு மாதம் கழிந்த பின்னர்(சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையோடு) பல் கலைக்கழக நிர்வாகக் குழு செப்டம்பர் 26, 2008 பல்கலைக்கழக மானியக் குழு ஒருங் கிணைப்பாளர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கியுள்ளனர். அன்றே 5 பேர் கொண்ட தேர்வுக்குழு கூட்டப்பட்டுள்ளது. அன்று மாலையே நேர்முகத்தேர்வு நடத்தப் பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ. 9,100 சம்பளத்திற்கு 2008 செப்டம்பர் 29 அன்று அவரது பணிநியமன ஆணை அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. சாந்தி அக்டோபர் 3, 2008ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். சாந்தி பணியில் சேர்ந்தபின்னர் பல்கலைக்கழகத்தின் நிர் வாகக்குழு அப்பதவிக்கு ஆட்கள் தேவை என்று ரூ.97,000 செலவில் விளம்பரம் செய் துள்ளது. அச்செலவினம் குறித்து தலைமைத் தணிக்கை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் அனைத்து தேர்வுக் குழுவிலும் தலைவராக உள்ளார். தற்போது அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

நன்றி தீக்கதிர்