Thursday, September 25, 2014

குழப்பங்கள் வேண்டாம் தகவல் அறியும் சட்டம் முன்போலவே இருக்கும். சென்னை ஐகோர்ட்

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான முந்தைய தீர்ப்பை திருத்தம் செய்த சென்னை ஐகோர்ட்


சென்னை ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளராக இருப்பவர் வி.விஜயன். இவர், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- 

புதுச்சேரியை சேர்ந்த பி.பாரதி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கேட்டு 53 மனுக்களை அனுப்பியுள்ளார். அதில், சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். 

தலைமை மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான புகார் முடித்து வைக்கப்பட்டது பற்றிய விவரமும், தலைமை பதிவாளர் நியமனத்தில் தனி நடைமுறைகள் இல்லை என்ற விவரமும் அவருக்கு பதிலாக வழங்கப்பட்டது. இதுதவிர வேறு எந்த பதில்கள் எல்லாம் வழங்க முடியுமோ அவைகளும் வழங்கப்பட்டு விட்டது. 

ஆனால், அவர் தகவலறியும் உரிமைச் சட்ட விதிகளைத் தவறாகப் பயன்படுத்தும் வகையிலும், நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் 53 மனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தில் பாரதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், அவர் கேட்கும் தகவல்களை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் விஜயன் தெரிவித்திருந்தார்.
 
இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரித்து, கடந்த 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருந்ததாவது:- 

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் படி, தகவல்களை பெறுவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அந்த உரிமையானது தகவல் அறியும் சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டதாகும். 

அந்த விதிகளில், எந்தவிதமான தகவல்களை ஒருவர் கேட்கலாம்? அந்தத் தகவல்களைக் கேட்க அவருக்கு என்ன உரிமை உள்ளது? என்பது கூறப்பட்டுள்ளது. அதேநேரம், அந்த உரிமைகளை வரையறுக்கப்படாமல் உள்ளது. 

எனவே, தகவல் அறியும் உரிமையானது ஒரு நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். அதேநேரம், அந்த நோக்கம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும். 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கும் நபர், அந்த தகவல் கேட்பது சொந்த நலனுக்காகவா? அல்லது பொதுநலனுக்கா? என்பது குறித்து குறைந்த பட்ச விவரங்களையாவது மனுவில் தெரிவிக்கவேண்டும். அந்த விவரங்களை தெரிவிக்கவில்லை என்றால், தகவல் கேட்கும் கேள்வி திருப்திகரமாக உள்ளதாக கருத முடியாது.
 
அதேநேரம், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வழங்கப்படும் தகவல்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதைப் போல, தகவல் கோருபவருக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த நோக்கத்துக்காக தகவல் கோரப்படுகிறது என்பதை தெரிவிக்காமல் தகவல் கேட்க முடியாது. 

அரசு நிர்வாகத்தில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்டு வரும் நோக்கத்துக்காக இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தச் சட்டம் தவறான நோக்கத்துக்காகவும், நிர்வாகத்தை மிரட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டால், அது அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் தன்னுடைய பாதையில் இருந்து விலகிச் செல்ல வழிவகுத்து விடும். 

அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, தகவல் கோருபவற்கு அதற்கான நியாயமான காரணங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என்று கூறியுள்ளது. நியாயமான நோக்கத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் அதேநேரத்தில், தவறான நோக்கத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும். 

இந்த வழக்கில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எதிர்மனுதாரர் பி.பாரதி ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார். இதனால், ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்துள்ளது. ஐகோர்ட்டின் பதிவாளர் அலுவலகம் தகவல்களை வழங்குவதற்காக பணி நேரத்தை செலவு செய்ய முடியாது. எனவே, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்கிறோம். 

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. 

சென்னை ஐகோர்ட்டின் இந்த கருத்தானது, தகவல் அறியும் சட்டத்தை நல்ல நோக்கத்துக்காக பயன்படுத்தும் சில சமூக ஆர்வலர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஒரு திருத்தத்தை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் நேற்று செய்துள்ளனர்.

முந்தைய தீர்ப்பின்படி, தகவல் கோருபவருக்கு எதற்காக அந்த தகவல் தேவைப்படுகிறது? என்பது தெரிவிக்கப்பட வேண்டும் என்பது போல் பொருள்படும் வகையில் நீதிபதிகளின் கருத்து செய்திகளில் வெளியாகியிருந்தது.

நேற்று வழங்கப்பட்ட திருத்தப்பட்ட தீர்ப்பின்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மனு செய்யும் விண்ணப்பதாரருக்கு எதற்காக அந்த தகவல் தேவைப்படுகிறது? என்பது தொடர்பான காரணங்கள் எதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

மேலும், மனுதாரர்களை தொடர்புக் கொள்ளும் தேவைக்கன்றி, வேறு எவ்விதமான தனிப்பட்ட விபரங்களையும் அவர்கள் இணைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.