Saturday, April 13, 2013

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்


தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பதை பல பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். RTI என்பது 2005 ல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தினால் அரசாங்கத்தை பற்றியோ, அரசாங்க அதிகாரிகளை பற்றியோ ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி பெற்று கொள்ளலாம். இதில் சில விதி விலக்குகளும், வரம்புகள்  உள்ளன.  



இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரையும் சென்றடையும் நோக்கில் இந்திய அரசு ஆன்லைன் பயிற்சிகள் கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள்.  7 நாள் மற்றும் 15 நாள் இரு வகை பயிற்சிகள் உள்ளன. இருந்தாலும் 7 நாள் பயிற்சியை முடித்த பின்னரே 15 நாள் பயிற்சியில் சேர முடியும். 

7 நாள் கோர்சில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை கொடுத்தால் தான் அடுத்த பிரிவிற்கு செல்ல முடியும். 


கோர்சில் சேருவதற்கான தகுதிகள்: 
  • இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்.
  • கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். 
  • கணினியில் பயர்பாக்ஸ், IE மற்றும் குரோம் உலாவிகளின் லேட்டஸ்ட் வெர்சன் வைத்திருக்க வேண்டும்.
  • கணினியில் PDF Reader மென்பொருள் இருத்தல் அவசியம். 
  • தேர்வுகள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால்  படித்து புரிந்து கொள்ளும் அளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். 

கோர்சில் சேர்வது எப்படி :
  • இந்த ஆன்லைன் கோர்ஸ்களில் சேர விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று Registration செய்ய வேண்டும். 
  • வெற்றிகரமாக பதிவு செய்த பின்னர் உங்களுக்கென ஒரு User Id மற்றும் Password உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள். 
  • அந்த விவரங்களை கொண்டு ஆன்லைன் கோர்ஸ் தளத்தில் நுழைந்து நீங்கள் கோர்ஸ் ஆரம்பித்து விடலாம். 
இதனை பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

User Manual for - 7 day Course
User Manual for - 15 day Course
நன்றி

Tuesday, April 2, 2013

தகவல்பெறும் உரிமை சட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் நகல்களை பெறலாம்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களின் நகல்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதற்காக அரசு உத்தரவு பிறப்பிக்கப்படாததால் விடைத்தாள்களின் நகல்கள் கொடுக்கப்படுவதில்லை.
தகவல்பெறும் உரிமை சட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் நகல்களை பெறலாம்ஆனால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் நகல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்துடன் ரூ.10 நீதிமன்றவில்லை, ஒரு பக்கத்துக்கு ரூ.2 என்ற அளவில் கட்டணத்தை செலுத்தினால் போதும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்குள் விடைத்தாள்களின் நகல்கள் கொடுக்கப்பட வேண்டும்.
நகல்களை தராவிட்டால் தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்து அவற்றை பெறலாம். ஏற்கனவே ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் நகல்களை வழங்கும்படி கடந்த 2008-ம் ஆண்டு பள்ளி கல்வித்துறையிடம் கேட்டிருந்தார். விடைத்தாள்களை வழங்க அரசு உத்தரவு இல்லை என்று அலுவலர் தெரிவித்தார்.
இதை விசாரித்த தகவல் ஆணையம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாரருக்கு விடைத்தாள் நகல்களை வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்களை தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற வழி வகை செய்துள்ளது. 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்த புதிய வழிமுறைகள்


வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்த புதிய வழிமுறைகள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி தகவல்களை அறிவதில் சிக்கல்கள் இருந்தது. இதனைக் களையும் வகையில் இந்திய தபால், தந்தித் துறை புதிய வழிமுறைகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை ஒருவர் அறிய விரும்பினால், 10 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை பணமாகவோ, காசோலையாகவோ அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமோ செலுத்தலாம்.

ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நேரில் பணமாக செலுத்த இயலாது. வெளி நாடுகளில் இந்திய பணம் 10 ரூபாய்க்கு காசோலை, கேட்பு வரைவோலையோ பெற முடியாது. இதனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவது இயலாததாக இருந்தது.

இதனை சரி செய்ய இந்திய தபால், தந்தி துறை, தனது இணையத் தளத்தில் புதிய 'இணைய தபால் நிலையத்தை' அறிமுகப்படுத்தி உள்ளது.

வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் இந்த இணையத் தளத்தில் உள்ள இணைய தபால் நிலையம் (இ-போஸ்ட் ஆபீஸ்) என்ற இணைப்புக்குள் சென்று, தங்களது பெயர்களை நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி இணைய தபால் ஆணையை ( இ- போஸ்டல் ஆர்டர்) பெறலாம். இதற்கு பிரத்தியேகமான எண்கள் வழங்கப்படும். இந்த எண்களை தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். 

இந்த வசதிகளால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெருமளவில் பயனடைவார்கள்.

பிரபுல் படேலுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கை விபரம் வெளியிட வேண்டும்: சி.வி.சி.,க்கு உத்தரவு

 " சிவில் விமான போக்குவரத்து துறையை கவனித்தவரும், தற்போதைய, கனரக தொழில்கள் துறை அமைச்சருமான பிரபுல் படேலுக்கு எதிராக, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர், சுனில் அரோரா தெரிவித்த புகார் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்' என, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை, முதன்மை தகவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக, தேசியவாத காங்கிரசை சேர்ந்த பிரபுல் படேல் இருந்த போது, முறைகேடுகள் நடந்ததாக, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த சுனில் அரோரா பிரச்னை கிளப்பியிருந்தார். இது குறித்து, கேபினட் செயலர், பி.கே.சதுர்வேதிக்கு, அரோரா கடிதம் எழுதியிருந்தார் இந்த பிரச்னை குறித்து, விசாரிக்கும்படி, சி.வி.சி., என்ற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம், லோக்சபா உறுப்பினர்களான, பிரபோத் பன்டா -- இந்திய கம்யூ மற்றும் நிஷிகாந்த் துபே - பா.ஜ., ஆகியோர் கோரியிருந்தனர். இந்த எம்.பி.,க்கள் மனு மீது ,என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மனு செய்தார். இதற்கு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், பதில் அளிக்க மறுத்துவிட்டது. இந்த விவகாரம், மீண்டும் முதன்மை தகவல் ஆணையர் வசம் வந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த முதன்மை தகவல் ஆணையர், சத்தியானந்தா மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கேபினட் செயலருக்கு, அரோரா எழுதிய கடிதம் மற்றும் கேபினட் செயலரிடம் இருந்து வந்த தகவலை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில், பிரபுல் படேலுக்கு எதிரான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்.இதில், அரோராவின் புகார் பற்றி வெளியிடதேவையில்லை. பொது நலன் கருதி, எம்.பி.க்கள் கோரியுள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும், அதன் தொடர் நடவடிக்கை விபரங்களையும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிரபுல் படேல் இருந்தபோது, ஏர் இந்தியாவுக்கு, தேவையான போயிங் விமானங்கள் வாங்க, அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, எம்.பி.,க்கள் பிரபோத் பன்டாவும், நிஷிகாந்த் துபேயும் புகார் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

பிரதமர் அலுவலகம் கேட்க கூடாத கேள்வி -ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் எதற்காக தகவல் கேட்கிறீர்கள்

ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் எதற்காக தகவல் கேட்கிறீர்கள் என்று பிரதமர் அலுவலகம் கேள்வி கேட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான விமானப்படை முன்னாள் அதிகாரி லோகேஷ் பத்ரா பிரதமர் அலுவலகத்தில் தகவல் கேட்டு மனு ஒன்றை அளித்தார். அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி எந்தெந்த தகவல்கள், ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது, டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அவர் கேட்டிருந்தார்.  

ஆனால், அந்த தகவலை பிரதமர் அலுவலக பொது தகவல் அதிகாரி ரிஸ்வி தர மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து லோகேஷ் பத்ரா மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த மேல் முறையீட்டு அதிகாரியான கிரிஷண் குமார் தகவல்களை 15 நாட்களுக்கு தர ரிஸ்விக்கு உத்தரவிட்டார். இந்த முறை தனது பதிலில், ''நீங்கள் எதற்காக இந்த தகவல்களை கேட்கிறீர்கள். அது உங்களுக்கு எந்த வகையில் பயன் அளிக்கும் என்று விளக்குங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முன்னாள் தலைமை தகவல் ஆணையர் ஏ.என்.திவாரி கூறுகையில், ''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட தகவல்களை தர வேண்டியது மட்டுமே பொது தகவல் அதிகாரியின் கடமை. அது ரகசியமான தகவல் என்றால் மட்டுமே தர மறுக்கலாம். எதற்காக தகவல் கேட்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்க அதிகாரம் இல்லை. இதற்காக பொது தகவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம்'' என்றார். 

நன்றி தினகரன்