Tuesday, January 12, 2010

உச்சநீதிமன்றமும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும்: தில்லி உயர்நீதிமன்றம்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும் என்று தில்லி உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

88 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பில், 'நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கான சலுகை அல்ல, அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தான்' என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜீத் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய குழு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலக விவகாரங்களையும் பெறலாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சார்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தை அச்சட்டத்தின் கீழ் கொண்டு வருவது என்பது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிப்பதாக அமையும் என்று கூறியிருந்தது. ஆனால், இக்கருத்தை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மேலும், நீதித்துறையில் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த வாரம் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்கள் என்றும் நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.