வருமான வரி அதிகாரியான மோகன்லால் சர்மா என்பவர் ஒருவரிடமிருந்து ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை பயணப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜுவும், டி.எஸ். தாக்கூரும் வேதனையுடன் வெளியிட்டிருக்கும் கருத்துகள் நாட்டின்மீதும் வருங்காலத்தின்மீதும் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அன்றாடம் மனதிற்குள் எழுப்பி, விடை கிடைக்காமல் வெந்து புழுங்கும் லஞ்சம் தொடர்பான விவாதம்தான்.
""லஞ்சத்தைக் கட்டுப்படுத்த நமது நாட்டில் எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரித் துறைகளில் கையூட்டு இல்லாமல் எந்த வேலையும் நகர்வதே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசே ஒவ்வொரு வேலைக்கும் இன்னின்ன கையூட்டு வழங்கப்பட வேண்டும் என்று விதிமுறை வகுத்துவிட்டால், எவ்வளவு செலவாகும் என்று குடிமகனுக்குத் தெரியும் என்பதுடன், தேவையற்ற பேரம் பேசுதலையும் தவிர்க்கலாமே'' என்று நாட்டு நிலைமையைக் கேலி செய்யும் விதத்தில் அங்கலாய்த்திருக்கிறார்கள் மேன்மை தாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனிலிருந்து வெளியான "வெளிநாட்டுக் கொள்கை' என்கிற ஆய்வு அறிக்கை ஒன்றில் நிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டிருக்கும் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 97-வது இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிர்வாக இயந்திரத்தின் தோல்விக்கு அடிப்படைக் காரணம் அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான நீதித்துறை, தேர்தல் ஆணையம், தணிக்கை ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்றவை குறிக்கோள் இழந்து செயலிழக்கப்படுவதுதான்.
இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதற்கு அரசியல் தலைமைதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். திறமையும், நேர்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகள் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்று அரசியல் தலைமை விழைந்ததால் ஏற்பட்ட நிர்வாகச் சீரழிவின் விளைவுகளைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
சுதந்திரம் பெற்ற ஆரம்பகாலகட்டத்தில் ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்கிற கருத்து கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பின்தள்ளப்பட்டு, மிகக்குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வருமானம் ஈட்ட வழிகோலும் உபாயமாகப் பதவி மாறிவிட்டிருப்பதுதான் இந்த நிலைமைக்குக் காரணம். இல்லையென்றால், நமது மக்கள் பிரதிநிதிகள் கடந்த தேர்தலில் காட்டியிருந்த சொத்து விவரம் அடுத்த தேர்தலில் போட்டியிடும்போது பலமடங்கு அதிகரித்திருப்பது எப்படி?
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் மட்டும் சுமார் ரூ.64.56 லட்சம் கோடி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை உலகிலுள்ள எல்லா நாடுகளின் மொத்த சுவிஸ் வங்கி சேமிப்பையும்விட அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தப் பிரச்னையைப் பற்றி மக்கள் இப்போது கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஓராண்டுக்கு முன்பு அதிர்வுகளை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னும் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. போபர்ஸ் பிரச்னையாகட்டும், பிகார் மாட்டுத்தீவன ஊழலாகட்டும் எதுவுமே முடிவுக்கு வரவில்லை. வரும் என்றும் தோன்றவில்லை. சட்டம் தனது கடமையை நீண்டநாள்களாகச் செய்துகொண்டே இருக்கிறது.
அமெரிக்காவில் கவர்னர் பதவி என்பது நமது முதல்வர் பதவிபோல. கடந்த 5 ஆண்டுகளில், இரண்டு கவர்னர்களும் ஆறு மேலவை மற்றும் மக்களவை உறுப்பினர்களும் ஊழல் குற்றங்களுக்காக 6 முதல் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்கள். இவர்களது ஊழல்கள் நமது இந்திய அரசியல்வாதிகளின் ஊழலுடன் ஒப்பிட்டால் வெறும் ஜுஜுப்பி ஊழல்கள். சீனாவில் இதே ஐந்தாண்டு காலகட்டத்தில் ஐந்து பெரிய அதிகாரிகளும், ஒரு மேயரும் விசாரணை நடத்தப்பட்டு ஊழலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சராசரி இந்தியக் குடிமகன் லஞ்சம் கொடுப்பதை ஒரு நடைமுறை வழக்கமாக ஜீரணித்துக் கொண்டுவிட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கையூட்டுப் பெறுவதும், கையூட்டுக் கொடுப்பதும் குற்றம் என்கிற உணர்வே இல்லாமல் மரத்துப் போய்விட்ட நிலைமை. இது அடிமட்டத்திலிருந்து உச்சாணிக் கொம்புவரை, சுவாசிக்கும் காற்றைப்போல இந்தியாவின் எல்லாத் துறைகளிலும் வியாபித்திருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
இங்கே ஊழலுக்காக சிறைத்தண்டனை பெற்றுத் தனது அரசியல் வாழ்வை இழந்த ஒரு அரசியல் தலைவர் உண்டா? ஊழலுக்காகப் பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்து விடுகிறார்களே, ஏன்? மக்கள் மன்றம் இவர்களை மன்னிக்கிறதே, எதற்காக? ஊழல் குற்றச்சாட்டு ஒருவர்மீது சுமத்தப்பட்டதும் ஆறே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அது அரசியல்வாதியோ, அதிகாரியோ, அரசு ஊழியரோ யாராக இருந்தாலும் பொதுச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டாமா? அப்படி எதுவும் நடப்பதில்லையே, ஏன்? வெட்கமே இல்லாமல் லஞ்சப் பணத்தில் சிலர் சுகவாழ்வு வாழ்வதை நாம் பார்த்துச் சகிக்கிறோமே, அது எதனால்?
நாம் ஊழலைச் சகிக்கிறோம். ஆனால், அந்த ஊழல் தீ ஊழித்தீயாக நம்மைத் தகிக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஊழலுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பப்படாவிட்டால், ஜனநாயகம் பறிபோய்விடும்.
நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னை ஊழல்தான் என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தாக வேண்டும்!