Saturday, February 27, 2010

தகவல் உரிமைச் சட்டம்: புலியைப் பூனையாக்கி...

பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சிவப்பு நிற அரசு எண்ணெய் நிறுவனத்திலிருந்து ஒரு தகவலைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்காக நகல் கட்டணமாக ரூ.100ம் சேர்த்து அனுப்பியிருந்தார். இதைப் பார்த்த ஆயில் நிறுவன தகவல் அதிகாரி, 40 பக்க நகலுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.10 வீதம் ரூ.400 அனுப்ப வேண்டும் என பதில் எழுதினார்.

நம்மவர், மிரளவில்லை. கட்டண விதிமுறையைக் காட்டி, ஒருபக்கத்துக்கு ரூ.2 போதும் என மற்றொரு கடிதம் எழுதினார். அந்த அதிகாரிகள் நம்மவரை இழுத்தடிக்க நினைத்தார்கள் போலும். ரூ. 400 கொடுத்தால்தான் தகவல். இல்லையென்றால் முடியாது எனப் பிடிவாதமாகச் சொல்லி விட்டார்கள்.

நம்மவர், தில்லியிலுள்ள தலைமைத் தகவல் ஆணையரிடம் முறையிட்டார். ஆயில் நிறுவன அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணை நடந்து முடிந்து. ஏற்கெனவே செலுத்தப்பட்ட கட்டணத்தில் தகவல் நகலைக் கொடுக்கும்படி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. நம்மவருக்கு கேட்ட தகவல் உரிய கட்டணத்தில் கிடைத்தது.

கதை முடிந்துவிடவில்லை....

வழக்கு நடந்தபோது, தில்லிக்கும் சண்டீகருக்கும் ஆயில் நிறுவன அதிகாரிகள் வந்து போன செலவு எவ்வளவு எனக் கேட்டு இன்னொரு மனுவை அனுப்பினார். பதில் வந்தது. பலமுறை விமானத்தில் சென்று வந்ததற்கு சில லட்சங்கள் வரை செலவாகிவிட்டதாக. முன்னூறு ரூபாய் கட்டணத்துக்காக செலவிடப்பட்டது லட்சக் கணக்கில். எல்லாம் அரசுப் பணம். மக்கள் பணம்.

பல சமயங்களில் அரசு நிர்வாகத்தின் இதுபோன்ற அவலட்சணங்களை தகவல் சட்டம் வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறது.

மன்மோகன் அரசின் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுவது இந்தச் சட்டம். இந்தச் சட்டப்படி, அரசு வேலைகளைக் கண்காணிக்கலாம், ஆவணங்களைச் சரிபார்க்கலாம், அலுவலகங்களைச் சோதனையிடலாம். அதெப்படி, இப்படியொரு சட்டத்தை நமது அரசியல்வாதிகள் அனுமதித்தார்கள். தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக் கொண்டதெப்படி? அவர்கள் சிக்கிக்கொள்ள அவர்களே வலை தயாரித்தது ஏன் என்பன போன்ற சந்தேகங்களெல்லாம் நமக்கு உண்டு.

தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அவ்வப்போது, இந்தச் சட்டம் அரசியல்வாதிகளை அவ்வப்போது சீண்டத் தவறியதில்லை. பார்த்தார்கள், அந்தச் சட்டத்தின் கொடுக்குகளையெல்லாம் பிய்த்தெறியத் தொடங்கிவிட்டார்கள்.

சட்டத்திலிருந்து விலக்களிக்கிறேன் என்று கூறி, எங்கெல்லாம் ஊழல் நடக்கச் சாத்தியமோ அங்கெல்லாம், தகவல் சட்டத்துக்கு வேலையில்லை என்று கூறிவிட்டார்கள். இவர்களது கணக்குப்படி, பிரதமர் அலுவலக நடவடிக்கைகள், அமைச்சர்களின் சொத்து விவரம் போன்றவை மக்கள் தெரிந்துகொள் அவசியமில்லாதவை. இப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளையும் இந்த விலக்குப் பட்டியலில் சேர்த்துவிட முனைத்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் தவிர வேறு யாரால் பெரிய ஊழலைச் செய்ய முடியும் எனத் தெரியவில்லை.

போகிற போக்கைப் பார்த்தால், பள்ளிக்கூடங்களை மட்டும்தான் சோதனையிட முடியும். ஸ்கூல் வாத்தியார் லஞ்சம் வாங்குகிறாரா என்று மட்டும்தான் நம்மால் கண்காணிக்க முடியும் போலிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குகிறது என்பதை இந்த விலக்குப் பட்டியலைப் பார்த்தாலே சொல்லிவிட முடியும்.

இந்தப் பதிவில் நான் எந்த மாநிலத்தையும் குறை சொல்ல முனையவில்லை. ஆனால், இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் இந்த விலக்குப் பட்டியல் வழியாக ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களெல்லாம் நேர்மையாகச் செயல்படத் துணிந்திருக்கின்றன என்று தெரியும்.

Saturday, January 30, 2010

RTI புதுவை வருவாய்துறைக்கு ரூ.1500 அபராதம்

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியுரிமை பற்றிய சில ஆவணங்களை தகவலாக கேட்டு கடந்த 8-2-2008 அன்று விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் 3 மாத காலங்கள் ஆகியும் தகவல் தரவில்லை. இதனால் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் 6-7-2009 அன்று மத்திய தகவல் ஆணையம் விசாரணை நடத்தி 6 வார காலத்திற்குள் அந்த ஆவணங்களை பார்வையிடவும், கட்டண மின்றி அந்த ஆவணங்களை வழங்கவும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும் அவர்கள் சரியாக நடை முறைப்படுத்தவில்லை. இதனால் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன்பேரில் 8-1-2010 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தி உரிய நேரத்தில் தகவல் தராததாலும்இ மத்திய தகவல் ஆணையும் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததாலும், புதுவை வருவாய்துறைக்கு ரூ.1500ஃ- அபராதம் விதித்து உத்தர விடப்பட்டுள்ளது.

சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய மாவட்ட கலெக்டர் அலுவலகமே உரிய காலத்தில் தகவல் தராததற்கு தண்டனை பெற்றுள்ளது வேதனைக்குரியது. புதுவையில் இதுபோல் பல அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் உரிய காலத்தில் தகவல் தராமல் காலதாமதம் செய்து வருகின்றனர்.

Tuesday, January 12, 2010

உச்சநீதிமன்றமும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும்: தில்லி உயர்நீதிமன்றம்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அடங்கும் என்று தில்லி உயர்நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.

88 பக்கங்கள் கொண்ட அத்தீர்ப்பில், 'நீதித்துறையின் சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கான சலுகை அல்ல, அது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தான்' என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதிகள் விக்ரம்ஜீத் சென், எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய குழு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 2ம் தேதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலக விவகாரங்களையும் பெறலாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சார்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்சநீதிமன்றத்தை அச்சட்டத்தின் கீழ் கொண்டு வருவது என்பது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிப்பதாக அமையும் என்று கூறியிருந்தது. ஆனால், இக்கருத்தை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மேலும், நீதித்துறையில் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிபடுத்தும் வகையில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த வாரம் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்கள் என்றும் நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.

Sunday, January 10, 2010

வேளாண் அமைச்சக ஆவணங்களை பொது மக்கள் பார்க்க அனுமதி

மத்திய வேளாண் அமைச்சகம், அதன் பல்வேறு திட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அடிமட்ட நிலையில் உள்ள பொது மக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய வேளாண் அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை பயனாளிகளுக்கு தெரிவிப்பதில் தயக்கம் இருக்கக்கூடும் என்பதால், அடிமட்ட நிலையில் ஆவணங்கள கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கு முக்கியதுத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய வேளாண்-கூட்டுறவுத்துறை அமைச்சக செயலாளர் டி நந்தகுமார், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமச் செயலாளர்களுக்கு அலுவல் ரீதியாக அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கை வெற்றி பெறுவதற்கு, மாநில அரசுகள் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொரு திட்டம் குறித்தும், அதனை செயல்படுத்தும் அமைப்புகள் குறித்த விரிவான விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்கள், அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளின் அலுவலகங்களில் பயனாளிகள், சம்பந்தப்பட்ட அனைவரும் பார்ப்பதற்கும், நகல் எடுப்பதற்கும் வசதியாக வைக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தெரிவிப்பதற்கான ஒரு நடைமுறைய மாநில அரசில் உருவாக்க வேண்டும்.

இது தொடர்பாக, மாநில அரசுகள் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ஒரு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

நம்பகமான முறையிலும், வெளிப்படையான முறையிலும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நன்மைய அடிமட்ட நிலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வேளாண் துறையின் திட்டங்கள், மாநில அரசுகளின் துறைகள், சிறப்பு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. மாநில அளவிலான பல்வேறு செயல்படுத்தும் அமைப்புகளிடம் பயனாளிகளின் விவரங்கள் உள்ளன. எனவே, மாநில அரசின் செயல்படுத்தும் அமைப்புகள் மூலமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான இந்த நடைமுறைய சிறப்பாகவும், நல்ல முறையிலும் செயல்படுத்தலாம்.

திட்டச் செலவுகள், கிடைக்கும் மானியம், திட்டங்களின் பயனாளிகள் தொடர்பான விவரங்களை அனைத்து செயல்படுத்தும் அமைப்புகளும் தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டால், திட்டங்களின் செயல்பாடு மேலும் நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் அமையும்.

வேளாண்மையின் பல்வேறு துறைகள் மேம்பாட்டுக்காக, வேளாண்மை, கூட்டுறவுத்துறை மாநிலங்களுக்கு 23 திட்டங்களுக்கு மானியம் வழங்குகிறது. இத்திட்டங்களில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா, எண்ணெய் வித்துக்கள், எண்ணெய் பனை, பருப்பு வகைகள் மற்றும் சோளத்திற்கான ஒருங்கிணைந்த திட்டம், தேசிய தோட்டக்கலைத் திட்டம், பருத்தி, சணல் தொழில்நுட்பத் திட்டம் ஆகியவையும் அடங்கும் என்று கூறியுள்ளார்.


Sunday, January 3, 2010

தகவல் பெறுவதற்கான படிகள் சுருக்கமாக

1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 , பிரிவு 5ன் கீழ் பொது தகவல் அலுவலரிடம் மனு செய்தல் (சட்டப் பிரிவு 7(1)ன்படி தகவல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் )

2. இச்சட்டப் பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீடு மேல் முறையீட்டு அலுவலருக்கு விண்ணப்பித்தல் (முதுநிலை பொது தகவல் அலுவலர்) விண்ணப்பம் பெற்ற 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட வேண்டும். சில நேர்வுகளில் 45 நாட்களுக்குள் தகவல் அளிக்கலாம்.

3. இச்சட்டப் பிரிவு 19(3)ன்கீழ் 2வது மேல் முறையீடு தமிழ் நாடு தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். (முதல் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணை பெற்ற 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பிக்க வேண்டும் )

4. இச்சட்டப் பிரிவு 19(9)ன்கீழ் தமிழ் நாடு தகவல் ஆணையம் தனது முடிவினையும் மற்றும் மேல்முறையீட்டுக்கான உரிமைகளையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய முடிவுகளால் பாதிக்கப்பட்டோர் பரிகாரம் வேண்டி நீதிப் பேராணை வழக்கு இந்திய அரசு அமைப்பு சட்டத்தின்கீழ் தொடரலாம்.