Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

Tuesday, April 2, 2013

பிரபுல் படேலுக்கு எதிரான புகார் மீதான நடவடிக்கை விபரம் வெளியிட வேண்டும்: சி.வி.சி.,க்கு உத்தரவு

 " சிவில் விமான போக்குவரத்து துறையை கவனித்தவரும், தற்போதைய, கனரக தொழில்கள் துறை அமைச்சருமான பிரபுல் படேலுக்கு எதிராக, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன முன்னாள் நிர்வாக இயக்குனர், சுனில் அரோரா தெரிவித்த புகார் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்' என, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை, முதன்மை தகவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக, தேசியவாத காங்கிரசை சேர்ந்த பிரபுல் படேல் இருந்த போது, முறைகேடுகள் நடந்ததாக, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த சுனில் அரோரா பிரச்னை கிளப்பியிருந்தார். இது குறித்து, கேபினட் செயலர், பி.கே.சதுர்வேதிக்கு, அரோரா கடிதம் எழுதியிருந்தார் இந்த பிரச்னை குறித்து, விசாரிக்கும்படி, சி.வி.சி., என்ற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம், லோக்சபா உறுப்பினர்களான, பிரபோத் பன்டா -- இந்திய கம்யூ மற்றும் நிஷிகாந்த் துபே - பா.ஜ., ஆகியோர் கோரியிருந்தனர். இந்த எம்.பி.,க்கள் மனு மீது ,என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் மனு செய்தார். இதற்கு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், பதில் அளிக்க மறுத்துவிட்டது. இந்த விவகாரம், மீண்டும் முதன்மை தகவல் ஆணையர் வசம் வந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த முதன்மை தகவல் ஆணையர், சத்தியானந்தா மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கேபினட் செயலருக்கு, அரோரா எழுதிய கடிதம் மற்றும் கேபினட் செயலரிடம் இருந்து வந்த தகவலை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில், பிரபுல் படேலுக்கு எதிரான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வெளியிட வேண்டும்.இதில், அரோராவின் புகார் பற்றி வெளியிடதேவையில்லை. பொது நலன் கருதி, எம்.பி.க்கள் கோரியுள்ளதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும், அதன் தொடர் நடவடிக்கை விபரங்களையும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிரபுல் படேல் இருந்தபோது, ஏர் இந்தியாவுக்கு, தேவையான போயிங் விமானங்கள் வாங்க, அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, எம்.பி.,க்கள் பிரபோத் பன்டாவும், நிஷிகாந்த் துபேயும் புகார் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமலர்

Monday, December 17, 2012

பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

கோவை : பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து "சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை, குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்து வைத்திருக்க, கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கணிசமான தொகை வழங்கப்படுகிறது. 

இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்றாலும், மலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குழந்தைகள் ஓரிடத்திலும், கணவர் வேறிடத்திலும் ஆண்டு கணக்கில் குடும்பமே பிரிந்து கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு பெண் ஆசிரியைகள் தள்ளப்படுகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் இடமாறுதல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாவட்டத்தில் உள்ள கணித காலிப் பணியிட விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்., 17ல் பெற்றார். அதில், 23.7.2012ல் பொதுமாறுதல் ஆணை வழங்கப்பட்டவர்கள் பட்டியலில், "எம்.பானு சரஸ்வதி' எனும் ஆசிரியையின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காடம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியை ஆக உள்ளார்.

ஆனால், இவர் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து காரமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் காரமடை பள்ளிகளில் விசாரித்தபோது, பானு சரஸ்வதி எனும் பெயரில் எந்த ஆசிரியையும் இல்லை என தெரிய வந்துள்ளது. காடம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எம்.பானுசரஸ்வதியிடம் கேட்டதற்கு, ""பட்டதாரி ஆசிரியை ஆக பதவி உயர்வு மூலம் காடம்பாறையில் நியமிக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் இடமாறுதல் கிடைக்கவில்லை. கணவர் ஓரிடத்திலும் குழந்தைகள் பெற்றோரிடமும் உள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,'' என்றார்.
ஆனால் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலருக்கு, கோவை பள்ளிக ளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

மலைப்பள்ளி ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கியதுபோல் ஆவணங்களில் காண்பித்து விடுவதும், பணம் பெற்றுக் கொண்டு அந்த இடங்களில் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமித்து வந்துள்ளதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தகுதி இருந்தும் இடமாறுதல் வழங்காமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகின்றனர்.

Monday, January 9, 2012

கறுப்புப் பணம் பதுக்கியிருப்பவர்கள் யார் யார்? கடிதத்தை வெளியிடுக மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

கறுப்புப் பணம் விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் தில்லி காவல்துறை அதிகாரிகளுடன் மேற் கொண்ட கடிதத்தொடர்பு விவரத்தை ஜனாதிபதி தலைமைச் செயலகம் வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

அயல்நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கறுப்புப் பணம் தொடர்பாக வெளி யுறவு மற்றும் நிதித்துறை அமைச்சகத் திற்கு தான் எழுதியது தொடர்பாக எடுக் கப்பட்ட நடவடிக்கையை அறிந்துகொள்ள ஒரு தகவல் உரிமை ஆர்வலர் மனு செய்தார். இந்த மனு அடிப்படையில் தகவல் ஆணையம் ஜனாதிபதி அலுவல கத்தை, கறுப்புப் பணம் தொடர்பான கடிதத் தொடர்பு விவரங்களை வெளியிடக் கூறியுள்ளது.

இதுதொடர்பான விசாரணையின் போது மனுதாரர், கறுப்புப்பணம் விவகாரம் தொடர்பாக வங்கி பிரிவு, நிதித்துறை அமைச்சகம் வெளியுறவுத்துறை அமைச் சகம், தில்லி காவல்துறை ஆகியவற்று டன் ஜனாதிபதி அலுவலகம் மேற் கொண்ட கடித விவரத்தையும் கேட்டிருந்தார்.

மனுதாரர் பல நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி சில விவரங்களை தந்து, இதர விவரங்களை பெற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை அணுகு மாறு கூறியுள்ளார்.

மனுதாரரின் விவரத்தை பரிசீலித்தப் போது, தகவல்கள் வெளியிடுவதில் எந்த விதப் பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்தது என தலைமை தகவல் ஆணையர் சத்யானந்த் மிஸ்ரா தனது உத்தரவில் கூறியுள்ளார்.

10 நாட்களுக்குள் ஜனாதிபதி அலு வலகம் மனுதாரர் கோரும் விவரங்களை தரவேண்டும் என்றும் தகவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Thursday, February 3, 2011

அய்யய்யோ! கிணத்தை காணோம்' தகவல் உரிமை சட்டத்தால் "பகீர்'


பெ.நா.பாளையம்:நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை குறித்து விவரம் கேட்டவருக்கு, ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள் முரண்பட்டுள்ளன. இந்த கணக்குப் படி, ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை யில் நான்கு, "காணாமல்' போய்விட்டன.


பெரியநாயக்கன் பாளையம் அருகே நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். 2009ம் ஆண்டு நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தில், 20 கேள்விகளை கேட்டிருந்தார். அதில் கிடைத்த பதில் களில், ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள், முரண்பாடான தகவல்களை தெரிவித்திருந்தனர்.


நாயக்கன் பாளையம் ஊராட்சியில் குடிநீர் ஆதாரங்கள் குறித்த கேள்விக்கு பெரியநாயக்கன் பாளையம் பி.டி.ஓ., (கிராம ஊராட்சி), பொது தகவல் அலுவலர் ஆகியோர், 13 ஆழ்குழாய் கிணறுகள், 21 கைப்பம்பு, 21 மின் மோட்டார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


இதே கேள்விக்கு நாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவர், 17 ஆழ்குழாய் கிணறுகள், 16 கைப்பம்புகள், 18 மின் மோட்டார்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதிகாரிகள் மற்றும் ஊராட்சித் தலைவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 4 ஆழ்குழாய் கிணறுகள், 5 கைப்பம்புகள், 3 மின் மோட்டார்கள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை. நாயக்கன்பாளையம் சின்னராஜ் கூறியதாவது: சமுதாய பொறுப்பில் உள்ளவர்களின் இது போன்ற பதிலால், உண்மையான விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியாமல் போய் விடுகிறது.


நாயக்கன்பாளையம் ஊராட்சியில் மொத்த "டிவி'க்களின் எண்ணிக்கை 12 என அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர். ஊராட்சித் தலைவர் ஆறு மட்டுமே உள்ளது என கூறியுள்ளார். மீதமுள்ள ஆறு "டிவி'க்கள் எங்கே போனது? பல கேள்விகளுக்கு பதில்கள் முரண்பாடாக உள்ளன.இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு சின்னராஜ் கூறினார்.

Friday, January 21, 2011

R T I :உடலிருக்க உயிரை பறிப்பதா?


உடலிருக்க உயிரை மட்டும் பறிப்பது போல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருக்க அதனை பயன்படுத்த விடாமல் முடக்கும் வேலை யில் மத்திய அரசு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

தகவல்பெறும் உரிமைச் சட்டம் இடதுசாரி கட்சிகளின் உறுதியான போராட்டத்தால் 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட் டது. அதன் பின்னர் அந்த சட்டத்தின் துணை யோடு இன்று நாடு முழுவதும் அரசு நிர்வாகத் தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் வெளிச் சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கமே அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் வெளிப் படைத்தன்மையாக இருக்க வேண்டும்; பொது மக்களுக்கு தேவையான தகவல்களை தரு வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே.

இச்சட்டம் அதிகார மட்டத்தில் இருப்போர் தங்கள் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைப்பதற் கும், விதிமுறைகளை மீறுவதற்கும் இடையூ றாக இருந்து வருவதாகக் கருதுகின்றனர். மேலும் பல ஊழல்பேர்வழிகளுக்கும் இச்சட்டம் வேப் பங்காயாகக் கசக்கிறது. உதாரணமாக தில்லி குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் மற்றும் வடி கால் திட்டத்திற்கான ஆய்வை யாரிடம் கொடுப் பது என்று பரிசீலனை நடந்து கொண்டிருந்தது. அப்போது உலகவங்கி தலையிட்டு “ பிரைவேர் அவுஸ்கூப்பர்ஸ்” என்ற நிறுவனத்திற்கு முறை கேடாக ஒதுக்க வைத்தது அம்பலமானது. அதே போல் எவ்வித நேர்காணலோ, விளம்பரமோ, போட்டியோ இன்றி முறைகேடாக பிரதமரின் வலதுகரமாக செயல்படும் மாண்டேக்சிங் அலு வாலியாவின் மகன் திட்ட ஆலோசகர் பதவி யில் அமர்த்தப்பட்டதும் இச்சட்டத்தின் தகவ லின் படி அம்பலமானது.

இப்படிப்பட்ட ஏராளமான மோசடிகளுக்குத் துணைநிற்கும் மத்திய அரசிற்கே இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம் இடையூறாக இருக்கிறது. ஆகவே இந்தச் சட்டத்தில் திருத்தம் என் கிறபெயரில் சட்டத்தையே நீர்த்துப்போகச்செய் வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு உரு வாக்கியிருக்கிறது. அதாவது தகவல் பெற விண் ணப்பிப்போர் ஒரு பொருள் குறித்து மட்டுமே விபரங்கள் கேட்க வேண்டும்; விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண் டும்; விண்ணப்பதாரர்கள் கேட்கும் தகவல் களைத் திரட்டச் செலவு ஆகும் பட்சத்தில் அத னை முழுமையாக விண்ணப்பதாரர்களே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத் தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திருத்தங்கள் அமலுக்கு வந்தால், ஒரு பொருள் குறித்த விபரங்களை மட்டும் பெறுவ தால் ஒரு தகவலை முழுமையாகப் பெற முடியாது. இதன் மூலம் முழுமையான தகவலை பெற பல வருடங்கள் இழுத்தடிக்கப்படலாம். மேலும் தகவல் பெற செலவு என்ற வகையில் விண்ணப்பிப்போரிடம் இருந்து பணத்தை கறந்து விரக்தியடையச் செய்ய முடியும். இதற் குள் நுட்பமான விஷயம் ஒன்று உள்ளடங்கி இருக்கிறது. அதாவது சாதாரண மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியாத அளவில் விலக்கி வைப்பது. இப்படிச் சட்டம் இருக்க அத னைச் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதற்கே இந்தச் சட்டத் திருத்தங்கள் உதவி செய்யும். ஒட்டுமொத்தத்தில் சட்டம் கொண்டு வந்த நோக்கமே குழி தோண்டி புதைக்கப்படும்.

மறுபுறம் தமிழக அரசோ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது போலீஸ் அதிகாரிகளின் முறைகேடுகள், அத்துமீறல் களை விசாரிக்கும் ரகசிய மற்றும் நம்பகத்தன் மை காப்புப் பிரிவுக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இப்படி இச்சட்டத்தின் குரல்வளை கொஞ்சம் கொஞ்சமாக நெரிக்கப் பட்டு வருகிறது.

Friday, December 17, 2010

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய தகவல் ஆணை யம் ரூ.45,000 அபராதம்.


காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி யெழுப்பியிருந்த விவகா ரத்தில் தகுந்த பதிலளிக்காத இந்திய ஒலிம்பிக் சங்கத் திற்கு மத்திய தகவல் ஆணை யம் ரூ.45,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.


தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் கீழ் செய் யப்பட்ட விண்ணப்பத் திற்கு 100 நாட்களுக்கு மேல் கடந்த பிறகும் தகவல் அளிக்கத்தவறியதால் மத்திய தகவல் ஆணையர் எம்.எல்.வர்மா ரூ. 25,000 அபராதம் விதித்தார்.

மற்றொரு வழக்கில் இந்திய ஒலிம்பிக் சங்கம் 80 நாட்களுக்கு மேலாகத் தாமதம் செய்த காரணத் தால் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Monday, December 13, 2010

இந்தியாவில் பாதி பேர் லஞ்சம் கொடுக்கின்றனர்: ஆய்வில் தகவல்




இந்தியாவில் 54 சதவீதம் பேர் கடந்த ஓராண்டில் தங்களது வேலைகளை முடிப்பதற்கு லஞ்சம் கொடுத்ததாக “டிரான்ஸபரன்ஸி இன்டர்நேஷனல்” என்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

உலக நாடுகளில் ஊழல் தொடர்பான ஆய்வை இந்த அமைப்பு நடத்தியது. கல்வி, நீதி, மருத்துவம், காவல், பத்திரப் பதிவு உள்ளிட்ட 9 துறைகளில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித் தீர்களா என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற பல் வேறு கேள்விகளுக்கு மக்கள் தந்த பதில்களின் அடிப்படையில் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியல் தயா ரிக்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு தினமான கடந்த 9-ம் தேதி இந்தப் பட்டியலைக் கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

86 நாடுகளைக் கொண்ட பட்டியலில் லஞ்சம் கொடுத்ததாக இந்தியாவில் 54 சதவீதம் பேர் பதிலளித்திருந்தனர். உலக அளவில் இந்த ஆய்வுக்காக 91 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவர்.

Tuesday, November 23, 2010

லஞ்ச ஒழிப்பு ஆணையராக குற்றவாளியா? உச்சநீதிமன்றம் கேள்வி


மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சிவிசி) தலைமை ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமித்தது எப்படி? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றவரை இத்தகைய உயரிய பதவிக்கு நியமித்ததன் பின்னணி என்ன? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் பிரதமர் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இப்போது தலைமை ஆணையர் நியமன விவகாரத்திலும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அரசின் பதிலை அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி, திங்களன்று நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அளித்தார். அப்போது பேசிய நீதிபதி, இந்த பதிலை பார்க்காமலேயே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது, அதாவது ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தகையவரை இதுபோன்ற மிக முக்கியமான பதவியில் அமர்த்தியது எப்படி என்பது தெரிந்தாக வேண்டும்.

தாமஸ் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு விவரத்தைப் பரிசீலனை செய்த பிறகே அரசின் பதிலை பரிசீலிக்க முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாகக் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த ஆவணத்தைப் பரிசீலித்து பின்னர் முடிவு செய்வதாக நீதிபதி கபாடியா கூறினார்.

பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பான பதிலை அரசு தாக்கல் செய்தது. அப்போது பி.ஜே. தாமஸ் நியமனத்தில் உரிய தகுதி வரையறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அவரது நம்பகத்தன்மை எந்த அளவுக்கு அளவிடப்பட்டது என்றனர். குற்றப் பத்திரிகையில் பெயர் உள்ள ஒருவரை இத்தகைய உயர் பதவிக்கு பரிந்துரைத்தது எவ்விதம் என்பது வியப்பாக உள்ளது என்றனர்.

இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, பாமாயில் இறக்குமதி ஊழலில் தாமஸýக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இவர் மீது வழக்குத் தொடர அதனால்தான் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கைப் பார்த்தால், ஒவ்வொரு கட்டத்திலும் அவர் மீது குற்றச்சாட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம், அப்படியிருப்பின் அவரை தலைமை ஆணையர் பதவிக்கு எவ்விதம் நியமிக்க முடியும்? அத்தகைய நபர்தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிறப்பாக பணியாற்றுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

ஒவ்வொரு கட்ட விசாரணை குறித்தும் சிபிஐ-யின் விளக்கம் தேவை என்றனர்.

பணியாளர்களுக்கான விதிமுறையில், ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலே அவரது பெயர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படக் கூடாது என்றுள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

2002-ம் ஆண்டிலிருந்தே இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போதிருந்தே அவரது பெயர் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் அவரால் ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) எப்படி சிறப்பாக செயலாற்ற முடியும்? அவருக்கே குற்ற உணர்வு, நெருடல் இருக்காதா? என்று நீதிபதிகள் கேட்டனர். இது மிகவும் முக்கியமான வழக்கு. எனவே ஒவ்வொரு கட்டமாக ஆராய்ந்து அதனடிப்படையில் தீர்ப்பு அளிக்கப் போவதாக நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு தகுதியின் அடிப்படையில் ஏற்கப்பட்டதல்ல. இந்த முழு வழக்குமே நம்பகத் தன்மை அடிப்படையிலானது. அனைத்து நடைமுறைகளும் கே.வி. தாமஸ் நியமனத்தில் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பதை இந்த நீதிமன்றம் ஆராயும்.

இதுபோன்ற சில குற்றச்சாட்டுகள் கணக்கில் எடுத்துக் கொண்டால், நீதிமன்றங்களின் ஒவ்வொரு நியமனத்தையும் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று அட்டர்னி ஜெனரல் பதிலளித்தார். பொதுநல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் வாஹன்வதி வாதாடினார்.

தாமஸ் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். கேரளத்தில் உணவுத் துறைச் செயலராக கே.வி. தாமஸ் இருந்தபோதுதான் பாமாயில் இறக்குமதி ஊழல் நடைபெற்றது. இதில் அவர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கையாள்கிறது. ஆனால் தாமஸ் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையராக உள்ளார்.

மேலும் தொலைத் தொடர்புத்துறைச் செயலராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் இவருக்கும் தொடர்புள்ளது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இப்பதவிக்கு தாமûஸ நியமிக்க வேண்டும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் என நிர்பந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாமஸ் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவிசி உள்ளிட்ட உயர் பதவிக்கு நியமிக்கப்படுபவரை தேர்வு செய்ய 3 பேரடங்கிய குழு உள்ளது. இந்தக் குழுவில் பெரும்பான்மை பெற்ற ஒருவரே நியமிக்கப்படுவார். அல்லது ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் நபரே இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஏற்காத நிலையில் தலைமை ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சட்ட விரோதமானது. இவர் செயல்படக் கூடாது என்றும், இவரது நியமனத்தை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்றும் தன்னார்வ அமைப்புகள் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தன.

Friday, October 15, 2010

மருத்துவக்கல்லூரி பணிநியமனங்களில் முறைகேடு ஆளுநர் மாளிகை, அமைச்சர் தலையீடு அம்பலமானது

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் நியமனத்தில் உயர் மட்ட அரசியல் தலையீடுகள் இருந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி, ஆளுநர் மாளிகை மற்றும் சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் அலுவலகம் போன்றவை சில குறிப்பிட்ட விண்ணப்ப தாரர்கள் பயன்பெறுமாறு தங்கள் செல் வாக்கைப் பயன்படுத்தியுள்ளன என்று தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, கவுரவ வேந்த ரான சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மற்றும் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மற்றும் தேர்வுக்குழுவின் தலைவரான கே. மீர் முஸ்தபா ஹூசைன் ஆகியோர் தங் களது செல்வாக்கினைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 4, 2008 அன்று எம். சாந்தி என் பவரின் விண்ணப்பத்தை பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. அந்த விண்ணப்பத்தில் “மாண்பு மிகு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுகாதாரம் மற்றும் குடும்ப சுகாதாரம் பரிந் துரைக்கப்பட்டு முன்மொழியப்பட்ட” என்று பச்சை மையினால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் கழிந்த பின்னர், சாந்தி, பல்கலைக் கழக மானியக்குழு ஒருங்கிணைப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டார். இந்த விஷயத் தில் விநோதமாக சாந்தியின் பணிநியமன ஆணை சாந்தியின் முகவரிக்கு அனுப்பப்படா மல் சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவல கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அக்கடி தத்தை “முறைப்படி” கையெழுத்திட்டு சுகா தாரத்துறை அமைச்சரின் உதவியாளர் சண் முகம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதே போன்று, சித்த மருத்துவத் துறை யில் ரீடர் வேலைக்கு டாக்டர் கே.எஸ். உமா வின் விண்ணப்பம் நவம்பர் 21, 2008ல் பெறப் பட்டுள்ளது. டாக்டர் கே.எஸ். உமாவின் விண்ணப்பத்தில் பச்சை மையினால் கையெழுத்திடப்பட்ட குறிப்பு பின்வருமாறு தெரிவிக்கிறது. “ஆளுநர் மாளிகையிலிருந்து தொலைபேசி மூலம் டாக்டர் கே. எஸ்.உமாவின் விண்ணப்பத்தை ரீடர் பதவிக்கு பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது”. இதைத்தொடர்ந்து துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் தலைமையில் ஜனவரி மாதம் 19ம் தேதி கூடிய தேர்வுக் குழு டாக்டர் கே. எஸ். உமாவை ரீடர் பதவியில் நிய மித்து உத்தரவிட்டது.

மற்றொரு சம்பவத்தில், ஆகஸ்ட் 21, 2007 பல்கலைக் கழக தேர்வுக் குழு, சித்த மருத் துவத் துறை விரிவுரையாளர் பணியிடத் திற்கு டாக்டர் ராஜலட்சுமியைப் பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை 2007 செப்டம்பர் 21ம் தேதி நிர்வாகக் குழுவும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிறிதுகாலம் கழிந்த பின்னர் டாக்டர் ராஜலட்சுமியின் விண்ணப்பம் காத் திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. அப்பணியிடத்திற்கு டாக்டர் இ. மணி கண்டன் பரிந்துரைக்கப்பட்டார். அதன்பின் னர் புதிதாக ஒரு லெக்சரர் பணியிடம் உரு வாக்கப்பட்டு டாக்டர் ராஜலட்சுமி பணியில் அமர்த்தப்பட்டார். அப்பணியிடத்திற்கு விளம்பரம் எதுவும் செய்யப்படவில்லை.

ஆதாரங்களோடு பல்கலைக்கழகத் தைத் தொடர்புகொண்டபோது பல்கலைக் கழக அதிகாரிகள் தற்காத்துக்கொள்ளும் விதமாக அனைத்துப் பணியிடங்களும் தகுதியின் அடிப்படையிலேயே நிரப்பப்பட் டது என்று சமாளித்தனர். அனைத்து நடை முறைகளையும் முடித்த பின்னரே பணிகள் நியமனம் செய்யப்பட்டன என்று மூத்த பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார். எனினும், அவரது கூற்றுக்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.

ஆகஸ்ட் 4, 2008ல் எம். சாந்தி அனுப்பிய விண்ணப்பத்தில் எந்தப்பணியிடத் திற்கான விண்ணப்பம் என்பது குறிப்பிடப் படவில்லை. விண்ணப்பம் பெற்று ஒரு மாதம் கழிந்த பின்னர்(சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையோடு) பல் கலைக்கழக நிர்வாகக் குழு செப்டம்பர் 26, 2008 பல்கலைக்கழக மானியக் குழு ஒருங் கிணைப்பாளர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கியுள்ளனர். அன்றே 5 பேர் கொண்ட தேர்வுக்குழு கூட்டப்பட்டுள்ளது. அன்று மாலையே நேர்முகத்தேர்வு நடத்தப் பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தற்காலிக அடிப்படையில் மாதம் ரூ. 9,100 சம்பளத்திற்கு 2008 செப்டம்பர் 29 அன்று அவரது பணிநியமன ஆணை அமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. சாந்தி அக்டோபர் 3, 2008ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். சாந்தி பணியில் சேர்ந்தபின்னர் பல்கலைக்கழகத்தின் நிர் வாகக்குழு அப்பதவிக்கு ஆட்கள் தேவை என்று ரூ.97,000 செலவில் விளம்பரம் செய் துள்ளது. அச்செலவினம் குறித்து தலைமைத் தணிக்கை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா ஹூசைன் அனைத்து தேர்வுக் குழுவிலும் தலைவராக உள்ளார். தற்போது அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

நன்றி தீக்கதிர்

Monday, October 11, 2010

ஊழல் எனும் ஊழித்தீ!

வருமான வரி அதிகாரியான மோகன்லால் சர்மா என்பவர் ஒருவரிடமிருந்து ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை பயணப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜுவும், டி.எஸ். தாக்கூரும் வேதனையுடன் வெளியிட்டிருக்கும் கருத்துகள் நாட்டின்மீதும் வருங்காலத்தின்மீதும் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அன்றாடம் மனதிற்குள் எழுப்பி, விடை கிடைக்காமல் வெந்து புழுங்கும் லஞ்சம் தொடர்பான விவாதம்தான்.

""லஞ்சத்தைக் கட்டுப்படுத்த நமது நாட்டில் எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரித் துறைகளில் கையூட்டு இல்லாமல் எந்த வேலையும் நகர்வதே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசே ஒவ்வொரு வேலைக்கும் இன்னின்ன கையூட்டு வழங்கப்பட வேண்டும் என்று விதிமுறை வகுத்துவிட்டால், எவ்வளவு செலவாகும் என்று குடிமகனுக்குத் தெரியும் என்பதுடன், தேவையற்ற பேரம் பேசுதலையும் தவிர்க்கலாமே'' என்று நாட்டு நிலைமையைக் கேலி செய்யும் விதத்தில் அங்கலாய்த்திருக்கிறார்கள் மேன்மை தாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனிலிருந்து வெளியான "வெளிநாட்டுக் கொள்கை' என்கிற ஆய்வு அறிக்கை ஒன்றில் நிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டிருக்கும் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 97-வது இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிர்வாக இயந்திரத்தின் தோல்விக்கு அடிப்படைக் காரணம் அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான நீதித்துறை, தேர்தல் ஆணையம், தணிக்கை ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்றவை குறிக்கோள் இழந்து செயலிழக்கப்படுவதுதான்.
இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதற்கு அரசியல் தலைமைதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். திறமையும், நேர்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகள் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்று அரசியல் தலைமை விழைந்ததால் ஏற்பட்ட நிர்வாகச் சீரழிவின் விளைவுகளைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

சுதந்திரம் பெற்ற ஆரம்பகாலகட்டத்தில் ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்கிற கருத்து கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பின்தள்ளப்பட்டு, மிகக்குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வருமானம் ஈட்ட வழிகோலும் உபாயமாகப் பதவி மாறிவிட்டிருப்பதுதான் இந்த நிலைமைக்குக் காரணம். இல்லையென்றால், நமது மக்கள் பிரதிநிதிகள் கடந்த தேர்தலில் காட்டியிருந்த சொத்து விவரம் அடுத்த தேர்தலில் போட்டியிடும்போது பலமடங்கு அதிகரித்திருப்பது எப்படி?

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் மட்டும் சுமார் ரூ.64.56 லட்சம் கோடி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை உலகிலுள்ள எல்லா நாடுகளின் மொத்த சுவிஸ் வங்கி சேமிப்பையும்விட அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தப் பிரச்னையைப் பற்றி மக்கள் இப்போது கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஓராண்டுக்கு முன்பு அதிர்வுகளை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னும் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. போபர்ஸ் பிரச்னையாகட்டும், பிகார் மாட்டுத்தீவன ஊழலாகட்டும் எதுவுமே முடிவுக்கு வரவில்லை. வரும் என்றும் தோன்றவில்லை. சட்டம் தனது கடமையை நீண்டநாள்களாகச் செய்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்காவில் கவர்னர் பதவி என்பது நமது முதல்வர் பதவிபோல. கடந்த 5 ஆண்டுகளில், இரண்டு கவர்னர்களும் ஆறு மேலவை மற்றும் மக்களவை உறுப்பினர்களும் ஊழல் குற்றங்களுக்காக 6 முதல் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்கள். இவர்களது ஊழல்கள் நமது இந்திய அரசியல்வாதிகளின் ஊழலுடன் ஒப்பிட்டால் வெறும் ஜுஜுப்பி ஊழல்கள். சீனாவில் இதே ஐந்தாண்டு காலகட்டத்தில் ஐந்து பெரிய அதிகாரிகளும், ஒரு மேயரும் விசாரணை நடத்தப்பட்டு ஊழலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சராசரி இந்தியக் குடிமகன் லஞ்சம் கொடுப்பதை ஒரு நடைமுறை வழக்கமாக ஜீரணித்துக் கொண்டுவிட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கையூட்டுப் பெறுவதும், கையூட்டுக் கொடுப்பதும் குற்றம் என்கிற உணர்வே இல்லாமல் மரத்துப் போய்விட்ட நிலைமை. இது அடிமட்டத்திலிருந்து உச்சாணிக் கொம்புவரை, சுவாசிக்கும் காற்றைப்போல இந்தியாவின் எல்லாத் துறைகளிலும் வியாபித்திருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
இங்கே ஊழலுக்காக சிறைத்தண்டனை பெற்றுத் தனது அரசியல் வாழ்வை இழந்த ஒரு அரசியல் தலைவர் உண்டா? ஊழலுக்காகப் பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்து விடுகிறார்களே, ஏன்? மக்கள் மன்றம் இவர்களை மன்னிக்கிறதே, எதற்காக? ஊழல் குற்றச்சாட்டு ஒருவர்மீது சுமத்தப்பட்டதும் ஆறே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அது அரசியல்வாதியோ, அதிகாரியோ, அரசு ஊழியரோ யாராக இருந்தாலும் பொதுச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டாமா? அப்படி எதுவும் நடப்பதில்லையே, ஏன்? வெட்கமே இல்லாமல் லஞ்சப் பணத்தில் சிலர் சுகவாழ்வு வாழ்வதை நாம் பார்த்துச் சகிக்கிறோமே, அது எதனால்?

நாம் ஊழலைச் சகிக்கிறோம். ஆனால், அந்த ஊழல் தீ ஊழித்தீயாக நம்மைத் தகிக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஊழலுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பப்படாவிட்டால், ஜனநாயகம் பறிபோய்விடும்.
நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னை ஊழல்தான் என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தாக வேண்டும்!