Showing posts with label உரிமை. Show all posts
Showing posts with label உரிமை. Show all posts

Wednesday, August 20, 2014

Most Information commissions fail transparency test

Information commissions — watchdogs for the transparency regime under theRTI Act — are some of the most opaque organizations according to an independent report. 

Of the 29 commissions in the country, only 17% have the facility of online filing of appeals and complaints, 42% do not display information on the cases that will be heard that day or that week, 58% do not display the updated status of pending appeals and complaints while 35% do not have a system of making their orders public within a reasonable timeframe. 

The report prepared by Commonwealth Human Rights Initiative (CHRI) also revealed that there was a steady increase in the number of RTI queries in 2012 as compared to the previous year. While Gujarat and Odisha saw a 46% increase in applications, Karnataka witnessed 29% increase. There was a 19% increase in RTI appeals with the Central Information Commission (CIC). 

More than three-fourths of the commissions do not have a website in the local language. The CIC and state information commissions of Chhattisgarh, Gujarat, Maharashtra and Uttar Pradesh have local language websites. 

Only 17% of information commissions provide online facilities for submitting appeals or complaints or both. While the CIC, Gujarat and Tripura commissions accept online filing of both appeals and complaints, their counterpart in Bihar provides this facility for filing second appeals only. 

About 42% of information commissions do not display cause lists on their websites that will help the public know what cases are likely to be heard by the commission. These include commissions in Assam, Bihar, Goa, Madhya Pradesh, Manipur, Meghalaya, Mizoram and Sikkim that continue to resist the idea of displaying cause lists on their websites, the report said. 

About 58% of commissions including Arunachal Pradesh, Assam, Bihar, Chhattisgarh, Goa, Gujarat, Himachal Pradesh, Jharkhand, Madhya Pradesh, Manipur, Mizoram, Nagaland, Sikkim, Tamil Nadu, Tripura, Uttar Pradesh and West Bengal do not provide data on disposal of cases and pendency of appeals and complaints. 

Nineteen of the 29 commissions have made their orders public but the commissions of Arunachal Pradesh, Goa, Jharkhand, Madhya Pradesh, Manipur and Uttar Pradesh do not have updated information for the last 2-4 years. Incidentally, this comes at a time when there has been a sharp increase in RTI applications. Gujarat and Odisha have seen a 46% increase in applications while Karnataka has recorded 29% increase. At 26%, Chhattisgarh witnessed the third highest increase in the number of RTI applications received in 2012 followed by Mizoram at 20%. 

Monday, January 20, 2014

அரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு.

அரசுப் பணியில் உள்ள கணவரின் ஊதியத்தை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்று மத்திய தகவல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி அரசின் உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் தனது கணவரின் ஊதிய விவரங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஜோதி ஷெராவத் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் ஊதிய விவரங்களை ஜோதிக்கு அளிக்கக்கூடாது என்று அவரின் கணவர் எழுத்துபூர்வமாக கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து ஊதிய விவரங்களை அளிக்க டெல்லி உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலுவிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தப் புகாரை விசாரித்த அவர், ஜோதி ஷெராவத்தின் கணவரின் ஊதிய விவரங்களை உடனடியாக அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதை செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி உள்துறை அமைச்சகத்தை அவர் எச்சரித்துள்ளார்.

பொதுமக்களுக்கும் உரிமை உண்டு

இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு: கணவர் அரசு ஊழியராக இருந்தால் அவரின் ஊதிய விவரங்களை அறிந்துக் கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு.
மேலும் மக்களின் வரிப் பணத்தில் இருந்துதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே அரசு ஊழியரின் ஊதியத்தை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு. இதுதொடர்பாக அளிக்கப்படும் மனுக்களை அரசுத் துறைகள் நிராகரிக்கக்கூடாது என்று ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.

Tuesday, April 2, 2013

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்த புதிய வழிமுறைகள்


வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்த புதிய வழிமுறைகள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி தகவல்களை அறிவதில் சிக்கல்கள் இருந்தது. இதனைக் களையும் வகையில் இந்திய தபால், தந்தித் துறை புதிய வழிமுறைகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை ஒருவர் அறிய விரும்பினால், 10 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை பணமாகவோ, காசோலையாகவோ அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமோ செலுத்தலாம்.

ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நேரில் பணமாக செலுத்த இயலாது. வெளி நாடுகளில் இந்திய பணம் 10 ரூபாய்க்கு காசோலை, கேட்பு வரைவோலையோ பெற முடியாது. இதனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்துவது இயலாததாக இருந்தது.

இதனை சரி செய்ய இந்திய தபால், தந்தி துறை, தனது இணையத் தளத்தில் புதிய 'இணைய தபால் நிலையத்தை' அறிமுகப்படுத்தி உள்ளது.

வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் இந்த இணையத் தளத்தில் உள்ள இணைய தபால் நிலையம் (இ-போஸ்ட் ஆபீஸ்) என்ற இணைப்புக்குள் சென்று, தங்களது பெயர்களை நிரந்தரமாக பதிவு செய்து கொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி இணைய தபால் ஆணையை ( இ- போஸ்டல் ஆர்டர்) பெறலாம். இதற்கு பிரத்தியேகமான எண்கள் வழங்கப்படும். இந்த எண்களை தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். 

இந்த வசதிகளால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெருமளவில் பயனடைவார்கள்.

பிரதமர் அலுவலகம் கேட்க கூடாத கேள்வி -ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் எதற்காக தகவல் கேட்கிறீர்கள்

ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் எதற்காக தகவல் கேட்கிறீர்கள் என்று பிரதமர் அலுவலகம் கேள்வி கேட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான விமானப்படை முன்னாள் அதிகாரி லோகேஷ் பத்ரா பிரதமர் அலுவலகத்தில் தகவல் கேட்டு மனு ஒன்றை அளித்தார். அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி எந்தெந்த தகவல்கள், ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது, டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை அவர் கேட்டிருந்தார்.  

ஆனால், அந்த தகவலை பிரதமர் அலுவலக பொது தகவல் அதிகாரி ரிஸ்வி தர மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து லோகேஷ் பத்ரா மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த மேல் முறையீட்டு அதிகாரியான கிரிஷண் குமார் தகவல்களை 15 நாட்களுக்கு தர ரிஸ்விக்கு உத்தரவிட்டார். இந்த முறை தனது பதிலில், ''நீங்கள் எதற்காக இந்த தகவல்களை கேட்கிறீர்கள். அது உங்களுக்கு எந்த வகையில் பயன் அளிக்கும் என்று விளக்குங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முன்னாள் தலைமை தகவல் ஆணையர் ஏ.என்.திவாரி கூறுகையில், ''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்ட தகவல்களை தர வேண்டியது மட்டுமே பொது தகவல் அதிகாரியின் கடமை. அது ரகசியமான தகவல் என்றால் மட்டுமே தர மறுக்கலாம். எதற்காக தகவல் கேட்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்க அதிகாரம் இல்லை. இதற்காக பொது தகவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கலாம்'' என்றார். 

நன்றி தினகரன்

Tuesday, December 18, 2012

சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை

இந்தியாவில், சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை; அதற்கு எடுத்துக்காட்டு, திருவண்ணாமலையில், சமூக ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டது என, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பலர், வேதனை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையில், சமூக சேவகரான ராஜ்மோகன், கடந்த 2ம் தேதி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சமூக சேவையில் ஈடுபடும் பொதுநல ஆர்வலர் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், பல்வேறு முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்தவரான, ஆவடி தரணிதரன் கூறுகையில், ""ராஜ்மோகன் படுகொலை செய்யப்பட்டது, இந்தியாவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. இச்சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தை சீர் குலைப்பதற்கு தொடர்ந்து சதி நடந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.

தொடரும் உயிர் பலி: தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, இன்று வரை, 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அடக்கம். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பல்வேறு கேள்விகள் கேட்டதால், 

கடுமையாக தாக்கப்பட்டவரான சந்தானம் கூறியதாவது: இந்தியாவில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே, தகவல் அறியும் ஆர்வலர்கள் உள்ளனர். அவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது, அரசின் கடமை. அரசு கொடுத்த உரிமையை, நாங்கள் பயன்படுத்துகிறோம். அது, தவறு செய்கிறவர்களுக்கு பாதகமாக அமைந்தால், நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவில், அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் நம்ப முடியாது. துப்பாக்கியின் இரண்டு குழல்கள் அவர்கள். எனவே, பொதுமக்களுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர்களை, பொதுமக்களே பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிவாரண நிதி: பாதுகாப்பு வழங்குவது குறித்து, பல்வேறு ஆர்வலர்கள் கூறியதாவது: சமூக ஆர்வலர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்த அச்சுறுத்தல் வந்தாலும், இதுகுறித்து தீவிர விசாரணை வேண்டும். குறிப்பாக, அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். தகவல் கேட்பவரால் யாரெல்லாம் பாதிப்படுகின்றனர் என்பதை அறிய வேண்டும். சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட ராஜ்மோகன் குடும்பத்திற்கு, நிவாரண நிதி வழங்க வேண்டும்; தனிமையில் இருக்கும் அவருடைய மனைவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, December 23, 2011

7 லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாகியுள்ளன தினமும் 20 கோடி பேர் பட்டினி கிடக்கும் நாட்டில்

கடந்த 10 ஆண்டுகளில், ரூ.330.71 கோடி மதிப்புள்ள 7.42 லட்சம் டன் உணவு தானியங்கள் பல்வேறு காரணங்களினால் வீணாகியுள்ளது என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கின்றது.

தகவல் உரிமை ஆர்வ லர் ஓம்பிரகாஷ் சர்மாவின் மனுவிற்குப் பதிலளித்த இந்திய உணவுக் கழம் இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

உலகில் போதிய உணவு இல்லாமல் இறப்பவர்களில் முன்றில் 1பங்கு இந்தியாவை சேர்ந்வர்களே அதுவும் ஒரு நிமிடத்திற்கு 5 இந்தியர்கள் இறக்கிறார்கள் ஆண்டுக்கு 25 இலட்சம் பேர் இறந்துபோகிறார்கள் ஒருவேலை உணவோடு 20கோடி இந்தியர்கள் படுக்கபோகிறார்கள் ஆனால் இந்திய அரசோ உணவுகளை எலிகளுக்கு கொடுப்போம் மனிதர்களுக்கு அல்ல என்று உச்சநீதிமன்றத்திடமே 

இந்திய உணவுக் கழகம் தனது பதிலில், ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2011 வரையில் ரூ.330.71 கோடி மதிப்பி லான 7.42 லட்சம் டன் உணவு தானியம் வீணாகி யுள்ளது என்று தெரிவித் துள்ளது.

2010-2011 வரையிலான காலகட்டத்தில் ரூ.3.40 கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகியுள்ளன.

Thursday, August 11, 2011

RTI:விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை மாணவர்களுக்கு உண்டு

நாட்டில் உள்ள சட்டங் களின்படி, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்கள் விடைத்தாள்களை ஆய்வு செய்யும் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் முக் கிய தீர்ப்பு அளித்துள்ளது.

மாணவர்களின் விடைத் தாள்களின் மீதான மதிப் பீடுகளைத் தெரிந்து கொள் ளும் உரிமை மாணவர் களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உண்டு என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.ரவீந் திரன் மற்றும் ஏ.கே.பட் நாயக் ஆகியோரடங்கிய பெஞ்சு தெரிவித்துள்ளது.

‘‘விடைத்தாள்களை ஆய்வு செய்தலை நிராகரித் திருப்பதானது ஏற்கத்தக் கல்ல’’ என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித் திட்ட தீர்ப்பை உச்சநீதி மன்ற பெஞ்சு இப்போது பிறப்பித்துள்ள தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், கொல்கத்தா பல்கலைக் கழகம், இந்திய சார்டர்டு அக்கவுண்டண்ட் இன்ஸ்டிட்யூட், மேற்குவங்க மத்திய பள்ளித் தேர்வா ணையம் மற்றும் மத்திய இடைநிலைப் பள்ளிகள் வாரியம் ஆகியவை மேல் முறையீடுகள் தாக்கல் செய் திருந்தன. இதேபோல் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட விடைத் தாள்களைக் காண்பிப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் அரசு பொதுத் தேர்வு ஆணையமும், பீகார் அரசு பொதுத் தேர்வு ஆணைய மும்கூட ஆட்சேபணைகள் தெரிவித்து மேல்முறையீடு கள் செய்திருந்தன. மேற்படி அமைப்புகள் அனைத்தும் கொல்கத்தா உயர்நீதிமன் றம் 2009 பிப்ரவரி 5 அன்று இது தொடர்பாக பிறப்பித் திருந்த தீர்ப்பை ஆட்சே பித்து இவ்வாறு மேல் முறை யீடுகள் செய்திருந்தன.

இவ்வாறு இவை தாக் கல் செய்திருந்த மேல்முறை யீடுகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எந்த ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ மட்டும் திருத்தப்பட்ட விடைத் தாள் களைத் தங்கள் வசமே வைத் திருக்கும் உரிமையைத் தேர்வு நடத்தும் அமைப்பு கள் வசம் ஒப்புவித்திடக் கூடாது என்கிற உயர்நீதி மன்றத்தின் முடிவுகளையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

விடைத்தாள்களின் மதிப்பெண்கள் அளித்தி ருப்பதை வெளிப்படுத்து வது என்பதும், அவற்றை மாணவர்கள் ஆய்வு செய் திட அனுமதிப்பது என்ப தும் தேர்வு முறையையே நிலைகுலையச் செய்து விடும் என்று இந்த அமைப் புகளின் சார்பில் முன்வைக் கப்பட்ட வாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட் டது.

கொல்கத்தா உயர்நீதி மன்றமானது தன்னுடைய டிவிஷன் பெஞ்சு மூலம் அளித்திருந்த தீர்ப்பில், மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரி யம் அல்லது பல்கலைக் கழ கங்கள் தாங்கள் நடத்தும் தேர்வுகளில் மாணவர் களின் விடைத்தாள்கள் எவ் வாறு மதிப்பீடு செய்யப் பட்டிருக்கின்றன என்று பரிசீலிக்கும் உரிமை, தகவல் அறியும் சட்டத்தின் வரை யறைப்படி மாணவர்க ளுக்கு உண்டு என்று தீர்ப் பளித்திருப்பதை உச்சநீதி மன்றம் அப்படியே ஒப்புக் கொண்டுள்ளது.

‘‘தாங்கள் எழுதிய விடைத் தாள்கள் மதிப்பீடு செய்யப் பட்டிருக்கும் விதத்தை மீண்டும் அந்த மாணவர்கள் பார்ப்பதென்பது அவர்கள் தங்கள் தரத்தை மேலும் முன்னேற்றிக்கொள்வதற்கு நிச்சயமாக உதவிடும். விடை களைத் திருத்துவதற்காக நியமனம் செய்யப்படும் ஆராய்வாளர்கள் விடை திருத்துவோர், அவ்வாறு நியமித்திடும் வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங் களின் ஊழியர்கள் கிடை யாது. அவர்கள் அத்தகைய அமைப்புகளின் ஒழுங்கு முறை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்’’ என் றும் உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Tuesday, March 8, 2011

களப்பலியாகும் தகவல் உரிமைப் போராளிகள்!



தகவல் உரிமைச் சட்டம், ஊழலுக்கு எதிரான பேராயுதமாக வடிவெடுத்துள்ளது. ஏட்டளவில் இருக்கும் சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் எப்படி ஆளும் வர்க்கத்தால் நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன என்பதை தகவல் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி வெளிக்கொணர முடிந்தது. இப்படியாக, இந்தியாவின் பல பகுதிகளிலும் தகவல் உரிமைப் போராளிகள் உருவானார்கள். சமீபத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஊழல் எப்படி சிதைக்கிறது? என்பதை தகவல் உரிமைப் போராளிகள் வெளிக்கொணர்ந்தனர். ஆனால், அவர்கள் ஊழல் பேர்வழி மற்றும் சமூக விரோத கும்பல்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். இப்படி நேர்மைக்காக போராடுபவர்கள் கொல்லப்படுவது முதல் முறை அல்ல. மத்திய அரசோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது என்பது வருத்தமளிக்கும் உண்மையாகும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததற்காக 35 வயது இளைஞர் நியாமத் அன்சாரி கொல்லப்பட்டார்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அமலாக்கத்துக்கு வருவதில் உறுதியாக இருந்த தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜீன் டிரெஸ் ஸின் நெருங்கிய நண்பர் அன்சாரி. அவர்கள் முன்னாள் வங்கி அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த அமைப்பு வேலை உறுதித் திட்டத்தில் நியாயமான கூலியை உழைப்பாளர்கள் பெறுகின்றனரா? என்பதை கண்காணிக்கும் வேலையைச் செய்தது.

2009 இல், வேலையே செய்யாத 78 பேருக்கு, அரசு நிர்வாகத்தினர் கூலி கொடுத்திருப்பதை அறிந்த அவர்கள் மக்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். 2011 பிப்ரவரியில், ராணிகலா கிராம ஊராட்சியில் நடைபெற்ற ஊரக வேலை உறுதிச் சட்ட மோசடியை வெளிக்கொணர்ந்தார். அவர்களின் அறிக்கையை மைய
மாகக் கொண்டு, முக்கியக் குற்றவாளி கைலாஷ் சாஹுவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அவர் மானிகா கிராமத்தின் முன்னாள் பிடிஓ (வட்டார வளர்ச்சி அலுவலர்). அவரிடம் இருந்தும், அவரது கூட்டாளியான ராகலா கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்தும் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், சில தினங்களிலேயே அன்சாரி கொல்லப்பட்டார்.

ஆவணங்களில் பெயர் பதிவாகியிருந்த மேற்கண்ட இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுடைய மற்றுமொரு கூட்டாளி, ஷன்கர் டுபே என்ற ஒப்பந்ததாரர் இப்போதும் தண்டிக்கப்படவில்லை.இந்த நிலையில், மக்கள் நல அமைப்புகளின் பல்வேறு உறுப்பினர்களும், சமூக மற்றும் மனித உரிமைப் போராளிகள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து நியாமத் அன்சாரியின் நண்
பர் குர்ஜித் சிங், “அன்சாரியின் மரணம், தகவல் உரிமைப் போராளிகள் இந்த அரசின் கீழ் எத்தனை பாதுகாப்பற்று இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறது” என்றார்.

கடந்த 2008 ஆம் இதே ஜார்க்கண்ட் மாநிலத்தில் லலித் மேதா என்ற போராளி கொல்லப்பட்டபோது அன்சாரியின் நண்பர் ஜீன் டிரெஸ், “இப்படியான செயல்கள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. ஜார்க்கண்டில் சமூக விரோத சக்திகளுக்கு எத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை நிலையை காட்டுகிறது” என்றார்.

மற்றொரு தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹார்ஸ் மந்தர் “இதுபோன்ற நிகழ்வுகள், நான் ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்று ஒரு தனி மனிதன் சொல்வது எத்தனை ஆபத்தான விசயமாக இருக்கிறது” என்பதைக் காட்டுகிறது என்றார்.

தகவல் உரிமைப் போராளியான நிகில் தே, “சுயநல விருப்பங்களைத் தகர்க்கக் கொடிய ஆயுதமான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் உரிமையை மக்கள் அடைந்திருக்கிறார்கள். ஆனால், சுயநல எண்ணங்களோ வன்முறை, குற்றவாளிகள் மற்றும் பணத்துடன் இணைந்து மேலும் வலிமையாகி இருக்கிறது. ஒவ்வொரு தகவல் உரிமைப் போராளியும் ஊழலுக்கு எதிராக முக்கிய அடியை எடுத்து வைக்கிறார் என்ற வகையில் பாராட்டுக்கு உரியவரே. தகவல் உரிமைச் சட்டம், இந்த போராளிகளைப் பாதுகாக்கவும் வழி வகை செய்யும் விதத்தில் திருத்தம் கொண்டு வரவேண் டும்” என்றார்.

அனிஸ் வனாய்க் என்ற ஆய்வாளர், கடந்த ஆண்டுகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மட்டும் 11 மாநிலங்களில் 40 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக கூறுகிறார். தகவல் உரிமைப் போராளிகளை பாதுகாப்பதற்கான சட்டத் திருத்தத்தை கொணர வேண்டுமென்ற குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் 2010 ஆகஸ்டில், அமைச்சரவை இப்படியான சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்தது.

ஆனால், அடிப்படையில் தகவல் பெறும் உரிமை சட்டத்தையே நீர்த்து போக செய்யும் வேலையும் இந்த திருத்தத்தில் இருப்பதை நாம் கவனிக்க தவறக்கூடாது என தகவல் பெறும் உரிமை போராளிகள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக தகவல் கேட்பவர்கள் ஒரு பொருள் குறித்து மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகவல்களை திரட்ட ஆகும் செலவை விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களும் இதற்குள் இருக்கிறது என்கின்றனர். சட்டத்தின் உயிர்நாதமாக விளங்கும் முக்கிய சரத்துகளை நீக்கி விட்டு, போராளிகளைப் பாதுகாப்பது குறித்த திருத்தமும் இருக்கிறது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

ஆகவே மத்திய அரசு தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் திருத்தங்களை கைவிட்டு, தகவல் பெறும் உரிமை போராளிகளை பாதுகாக்கும் திருத்தத்தை உறுதியாக கொண்டுவருவதே தகவல் பெறும் உரிமை சட்டம் உயிரோட்டமாக இருப்பதற்கு உதவி செய்யும்.

Friday, January 21, 2011

R T I :உடலிருக்க உயிரை பறிப்பதா?


உடலிருக்க உயிரை மட்டும் பறிப்பது போல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருக்க அதனை பயன்படுத்த விடாமல் முடக்கும் வேலை யில் மத்திய அரசு தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது.

தகவல்பெறும் உரிமைச் சட்டம் இடதுசாரி கட்சிகளின் உறுதியான போராட்டத்தால் 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட் டது. அதன் பின்னர் அந்த சட்டத்தின் துணை யோடு இன்று நாடு முழுவதும் அரசு நிர்வாகத் தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் வெளிச் சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் நோக்கமே அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் வெளிப் படைத்தன்மையாக இருக்க வேண்டும்; பொது மக்களுக்கு தேவையான தகவல்களை தரு வதை உறுதி செய்ய வேண்டும் என்பதே.

இச்சட்டம் அதிகார மட்டத்தில் இருப்போர் தங்கள் இஷ்டத்திற்கு சட்டத்தை வளைப்பதற் கும், விதிமுறைகளை மீறுவதற்கும் இடையூ றாக இருந்து வருவதாகக் கருதுகின்றனர். மேலும் பல ஊழல்பேர்வழிகளுக்கும் இச்சட்டம் வேப் பங்காயாகக் கசக்கிறது. உதாரணமாக தில்லி குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் மற்றும் வடி கால் திட்டத்திற்கான ஆய்வை யாரிடம் கொடுப் பது என்று பரிசீலனை நடந்து கொண்டிருந்தது. அப்போது உலகவங்கி தலையிட்டு “ பிரைவேர் அவுஸ்கூப்பர்ஸ்” என்ற நிறுவனத்திற்கு முறை கேடாக ஒதுக்க வைத்தது அம்பலமானது. அதே போல் எவ்வித நேர்காணலோ, விளம்பரமோ, போட்டியோ இன்றி முறைகேடாக பிரதமரின் வலதுகரமாக செயல்படும் மாண்டேக்சிங் அலு வாலியாவின் மகன் திட்ட ஆலோசகர் பதவி யில் அமர்த்தப்பட்டதும் இச்சட்டத்தின் தகவ லின் படி அம்பலமானது.

இப்படிப்பட்ட ஏராளமான மோசடிகளுக்குத் துணைநிற்கும் மத்திய அரசிற்கே இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டம் இடையூறாக இருக்கிறது. ஆகவே இந்தச் சட்டத்தில் திருத்தம் என் கிறபெயரில் சட்டத்தையே நீர்த்துப்போகச்செய் வதற்கான வழிமுறைகளை மத்திய அரசு உரு வாக்கியிருக்கிறது. அதாவது தகவல் பெற விண் ணப்பிப்போர் ஒரு பொருள் குறித்து மட்டுமே விபரங்கள் கேட்க வேண்டும்; விண்ணப்பம் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண் டும்; விண்ணப்பதாரர்கள் கேட்கும் தகவல் களைத் திரட்டச் செலவு ஆகும் பட்சத்தில் அத னை முழுமையாக விண்ணப்பதாரர்களே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருத் தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்திருத்தங்கள் அமலுக்கு வந்தால், ஒரு பொருள் குறித்த விபரங்களை மட்டும் பெறுவ தால் ஒரு தகவலை முழுமையாகப் பெற முடியாது. இதன் மூலம் முழுமையான தகவலை பெற பல வருடங்கள் இழுத்தடிக்கப்படலாம். மேலும் தகவல் பெற செலவு என்ற வகையில் விண்ணப்பிப்போரிடம் இருந்து பணத்தை கறந்து விரக்தியடையச் செய்ய முடியும். இதற் குள் நுட்பமான விஷயம் ஒன்று உள்ளடங்கி இருக்கிறது. அதாவது சாதாரண மக்கள் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியாத அளவில் விலக்கி வைப்பது. இப்படிச் சட்டம் இருக்க அத னைச் செயல்படவிடாமல் முடக்கி வைப்பதற்கே இந்தச் சட்டத் திருத்தங்கள் உதவி செய்யும். ஒட்டுமொத்தத்தில் சட்டம் கொண்டு வந்த நோக்கமே குழி தோண்டி புதைக்கப்படும்.

மறுபுறம் தமிழக அரசோ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது போலீஸ் அதிகாரிகளின் முறைகேடுகள், அத்துமீறல் களை விசாரிக்கும் ரகசிய மற்றும் நம்பகத்தன் மை காப்புப் பிரிவுக்கும் விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இப்படி இச்சட்டத்தின் குரல்வளை கொஞ்சம் கொஞ்சமாக நெரிக்கப் பட்டு வருகிறது.

Monday, October 11, 2010

ஊழல் எனும் ஊழித்தீ!

வருமான வரி அதிகாரியான மோகன்லால் சர்மா என்பவர் ஒருவரிடமிருந்து ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை பயணப்பட்டிருக்கும் வழக்கின் விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜுவும், டி.எஸ். தாக்கூரும் வேதனையுடன் வெளியிட்டிருக்கும் கருத்துகள் நாட்டின்மீதும் வருங்காலத்தின்மீதும் அக்கறையுள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அன்றாடம் மனதிற்குள் எழுப்பி, விடை கிடைக்காமல் வெந்து புழுங்கும் லஞ்சம் தொடர்பான விவாதம்தான்.

""லஞ்சத்தைக் கட்டுப்படுத்த நமது நாட்டில் எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படுவதில்லை என்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. குறிப்பாக, வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரித் துறைகளில் கையூட்டு இல்லாமல் எந்த வேலையும் நகர்வதே இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசே ஒவ்வொரு வேலைக்கும் இன்னின்ன கையூட்டு வழங்கப்பட வேண்டும் என்று விதிமுறை வகுத்துவிட்டால், எவ்வளவு செலவாகும் என்று குடிமகனுக்குத் தெரியும் என்பதுடன், தேவையற்ற பேரம் பேசுதலையும் தவிர்க்கலாமே'' என்று நாட்டு நிலைமையைக் கேலி செய்யும் விதத்தில் அங்கலாய்த்திருக்கிறார்கள் மேன்மை தாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனிலிருந்து வெளியான "வெளிநாட்டுக் கொள்கை' என்கிற ஆய்வு அறிக்கை ஒன்றில் நிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்துவிட்டிருக்கும் 146 நாடுகளில் இந்தியாவுக்கு 97-வது இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிர்வாக இயந்திரத்தின் தோல்விக்கு அடிப்படைக் காரணம் அரசியல் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான நீதித்துறை, தேர்தல் ஆணையம், தணிக்கை ஆணையம், ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்றவை குறிக்கோள் இழந்து செயலிழக்கப்படுவதுதான்.
இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதற்கு அரசியல் தலைமைதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். திறமையும், நேர்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு தங்களுக்குச் சாதகமான அதிகாரிகள் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்று அரசியல் தலைமை விழைந்ததால் ஏற்பட்ட நிர்வாகச் சீரழிவின் விளைவுகளைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

சுதந்திரம் பெற்ற ஆரம்பகாலகட்டத்தில் ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்குச் சேவை செய்வதற்கு என்கிற கருத்து கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பின்தள்ளப்பட்டு, மிகக்குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வருமானம் ஈட்ட வழிகோலும் உபாயமாகப் பதவி மாறிவிட்டிருப்பதுதான் இந்த நிலைமைக்குக் காரணம். இல்லையென்றால், நமது மக்கள் பிரதிநிதிகள் கடந்த தேர்தலில் காட்டியிருந்த சொத்து விவரம் அடுத்த தேர்தலில் போட்டியிடும்போது பலமடங்கு அதிகரித்திருப்பது எப்படி?

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் மட்டும் சுமார் ரூ.64.56 லட்சம் கோடி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை உலகிலுள்ள எல்லா நாடுகளின் மொத்த சுவிஸ் வங்கி சேமிப்பையும்விட அதிகம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தப் பிரச்னையைப் பற்றி மக்கள் இப்போது கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஓராண்டுக்கு முன்பு அதிர்வுகளை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னும் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறது. போபர்ஸ் பிரச்னையாகட்டும், பிகார் மாட்டுத்தீவன ஊழலாகட்டும் எதுவுமே முடிவுக்கு வரவில்லை. வரும் என்றும் தோன்றவில்லை. சட்டம் தனது கடமையை நீண்டநாள்களாகச் செய்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்காவில் கவர்னர் பதவி என்பது நமது முதல்வர் பதவிபோல. கடந்த 5 ஆண்டுகளில், இரண்டு கவர்னர்களும் ஆறு மேலவை மற்றும் மக்களவை உறுப்பினர்களும் ஊழல் குற்றங்களுக்காக 6 முதல் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்கள். இவர்களது ஊழல்கள் நமது இந்திய அரசியல்வாதிகளின் ஊழலுடன் ஒப்பிட்டால் வெறும் ஜுஜுப்பி ஊழல்கள். சீனாவில் இதே ஐந்தாண்டு காலகட்டத்தில் ஐந்து பெரிய அதிகாரிகளும், ஒரு மேயரும் விசாரணை நடத்தப்பட்டு ஊழலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சராசரி இந்தியக் குடிமகன் லஞ்சம் கொடுப்பதை ஒரு நடைமுறை வழக்கமாக ஜீரணித்துக் கொண்டுவிட்ட நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கையூட்டுப் பெறுவதும், கையூட்டுக் கொடுப்பதும் குற்றம் என்கிற உணர்வே இல்லாமல் மரத்துப் போய்விட்ட நிலைமை. இது அடிமட்டத்திலிருந்து உச்சாணிக் கொம்புவரை, சுவாசிக்கும் காற்றைப்போல இந்தியாவின் எல்லாத் துறைகளிலும் வியாபித்திருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
இங்கே ஊழலுக்காக சிறைத்தண்டனை பெற்றுத் தனது அரசியல் வாழ்வை இழந்த ஒரு அரசியல் தலைவர் உண்டா? ஊழலுக்காகப் பதவி இழந்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்து விடுகிறார்களே, ஏன்? மக்கள் மன்றம் இவர்களை மன்னிக்கிறதே, எதற்காக? ஊழல் குற்றச்சாட்டு ஒருவர்மீது சுமத்தப்பட்டதும் ஆறே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அது அரசியல்வாதியோ, அதிகாரியோ, அரசு ஊழியரோ யாராக இருந்தாலும் பொதுச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டாமா? அப்படி எதுவும் நடப்பதில்லையே, ஏன்? வெட்கமே இல்லாமல் லஞ்சப் பணத்தில் சிலர் சுகவாழ்வு வாழ்வதை நாம் பார்த்துச் சகிக்கிறோமே, அது எதனால்?

நாம் ஊழலைச் சகிக்கிறோம். ஆனால், அந்த ஊழல் தீ ஊழித்தீயாக நம்மைத் தகிக்கப் போகிறது என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஊழலுக்கு எதிராக உரத்த குரல் எழுப்பப்படாவிட்டால், ஜனநாயகம் பறிபோய்விடும்.
நம்மை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னை ஊழல்தான் என்பதை ஒவ்வொரு இந்தியனும் உணர்ந்தாக வேண்டும்!

Wednesday, September 29, 2010

தெருவிளக்கு அரியப்படுகிறதா அறியும் உரிமை? செப்.28 : அறிந்து கொள்வதற்கான உரிமைநாள்

“ஒன்றைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதில் வெட்கப்படுவதற்கு ஏதுமில்லை; தெரிந்துகொள்ள முயலாமல் இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது.” -இது ஒரு ரஷ்யப் பழமொழி.

எதையும் தெரிந்துகொள்ளும் குறுகுறுப்புதான் மனித சமுதாய வளர்ச்சிக்கே அடிப்படை. நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் ஏன் விடிகிறது, ஏன் இருட்டுகிறது, ஏன் மழை பொழிகிறது, ஏன் வெயில் கொளுத்துகிறது என்றெல்லாம் துருவி துருவி, தெரிந்துகொள்ள முயலாமல் இருந்திருப்பார்களானால் மானுடப் பரிணா மத்தின் வளர்ச்சி இன்றும் கூட இயற்கை நிகழ்வுகளுக்கு அஞ்சியஞ்சிக் காடுகளில் ஓடிக்கொண்டிருப்பதாகவே தேங்கிப்போயிருக்கும்.

ஆகவேதான் அறிந்து கொள்வது என்பது மனித நாகரீகக்கூறாக மட்டுமல்லா மல், அடிப்படை மனித உரி மையாகவும் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. நீண்ட நெடும் போராட்டங்களின் வெற்றியா கவே இந்த அங்கீகாரம் கிடைத் தது. ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிரான சவால்கள் மேலோங்குகிற போதெல்லாம், தங்களுடைய அதிகா ரத்தை நிலைநாட்ட ஒடுக்குமுறையில் இறங்குகையில் முதலில் கைவைப்பது குடிமக்களின் இந்த உரிமையில்தான். இந் தியாவில் இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சிக்காலத்தில், மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள ஒரு அதிகாரி நினைத் தால் கூட பத்திரிகைகளில் குறிப்பிட்ட செய்திகள் வெளிவராமல் தடுக்க முடிந்தது என்பதை மறக்க முடியுமா என்ன?

அப்படி அவசரநிலை ஆட்சி என ஒன்று இல்லாத காலத்திலும் கூட, அரசாங்க ரகசியக் காப்புச் சட்டம் என்பது போன்ற பல பெயர்களில் பல தகவல்கள் மறைக்கப்படுவ துண்டு. “ஜனநாயகத்தில் மக்கள்தான் எசமானர்கள்” என்ற கவர்ச்சிகரமான சொல்லாடல்கள் இருந்தாலும், நடைமுறை யில் அந்த எசமானர்களுக்குத் தெரியாம லேதான் பல நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன. உலகம் முழுவதுமே இப்படியாக இருந்த நிலையில்தான் தகவல்களை அறி வது ஒரு உரிமை என்ற முழக்கத்தோடு போராட்ட இயக்கங்கள் வெடித்தன. அந்த வெடிப்பு, அந்த உரிமையை ஐ.நா. சபை அங்கீகரிக்கவும், அதன் உறுப்பு நாடுகள் இதற்கான சட்டம் கொண்டு வருமாறு தீர்மா னம் நிறைவேற்றவும் வழிவகுத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தக் கவைக்கும் முயற்சியாக, ஒவ்வொரு ஆண் டும் செப்டம்பர் 28 அன்று “அறிந்து கொள்வதற்கான உரிமை நாள்” என்று அனுசரிக்கப்படுகிறது. பல்கேரியா நாட்டின் சோஃபியா நகரில் 2002-ம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற பன்னாட்டுக் கூட்டத் தில், உலகந்தழுவிய அளவில் தகவல் சுதந் திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நாளாகக் கடைப்பிடிக்க முடிவுசெய்யப்பட் டது.

தகவல் பெறுவதற்கான வாய்ப்பு ஒவ் வொருவரின் உரிமை; தகவல் அளிப்பதே அடிப்படை விதியாக இருக்க வேண்டும், ரகசியம் என்பது விதிவிலக்காகவே இருக்க வேண்டும்; பொதுமக்கள் சார்ந்த அனைத்து அரசு அமைப்புகளுக்கும் இது பொருந்தும்; தகவல் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாகவும், விரைவாகவும், இலவசமா கவும் இருக்க வேண்டும்; வேண்டுகோள் விடுப்போருக்கு உதவுவது அதிகாரிகளின் கடமை; தகவல் மறுக்கப்படுமானால் நியாய மான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண் டும்; ரகசியம் காக்கப்படுவதில் பொதுநல னுக்கே முன்னுரிமை; ஒரு பாதகமான முடிவு எடுக்கப்படுகிறது என்றால் மேல்முறையீடு செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு; அரசு அமைப்புகள் மையமான தகவல்களை முனைப்புடன் வெளியிட வேண்டும்; ஒரு சுதந்திரமான அமைப்பி னால் இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்... ஆகிய இந்த அடிப்படைக் கொள்கைகளை இந்த நாளில் மக்களி டையே எடுத்துச் செல்லவும் முடிவு செய்யப் பட்டது.

இந்தியாவில் நடந்த போராட்ட இயக் கத்தின் வெற்றியாக 2005ம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த வெற்றி அவ்வ ளவு எளிதில் வந்துவிடவில்லை. சட்டப்பூர்வ அதிகாரம் ஏதுமற்ற ஏற்பாடாக மாற்றுவதற் கெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் முயன் றார்கள். பல துறைகளை இந்தச் சட்டத்திற்கு உட்படாததாக அறிவிக்கவும், ஒரு நீர்த்துப் போன சட்டமாக மாற்றவும் அதிகார வர்க்க மும் பல வழிகளைக் கையாண்டது. ஆயி னும், இடதுசாரிகள் ஆதரவோடுதான் ஆட்சி நடந்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்த ‘முதலாம்’ ஐமுகூட்டணி அரசு, ஒரேயடியாக நீர்த்துப்போகச் செய்ய முடியாமல் தற் போதுள்ள சட்டத்தைக் கொண்டு வந்தது.

அப்படியும் - பாதுகாப்புத்துறை, உளவுத் துறை போன்றவை இந்தச் சட்டத்தின் கையில் அகப்படாமல் விலக்கிவைக்கப்பட் டுள்ளன. அண்மையில் உச்சநீதிமன்றம் தனக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று சொல்ல, அதெல்லாம் பொருந்தும் என்று தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்த சுவை யான நிகழ்ச்சியும் நடந்தது.

சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்ட தேசிய தகவல் உரிமை ஆணையம், மாநில தகவல் ஆணையம் ஆகியவற்றிற்குப் போதுமான ஊழியர்கள் இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் இந்த ஆணையங் கள் முறையாகவும், வீரியமாகவும் செயல் படுவதற்கு முட்டுக்கட்டைகளாக உள்ளன. இதனை மனித உரிமை இயக்கங்கள் பல முறை சுட்டிக்காட்டியும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

சட்டப்படி அரசு அலுவலகங்களில் தக வல் அலுவலர்கள் என நியமிக்கப்பட்டிருந் தாலும், அவர்களுக்கு சட்டம் பற்றிய போதிய பயிற்சி இல்லை. ஆகவே, பொதுமக்க ளிடமிருந்தோ, அமைப்புகளிடமி ருந்தோ தகவல்கள் கேட்டு வரும் விண்ணப்பங்களுக்கு பதில ளிக்காமலே விடுவது என்பது சர்வசாதாரணமாக நடை பெறுகிறது. எப்படிப்பட்ட தக வல்களை தெரிவிக்கலாம், அல்லது தெரிவிக்கக் கூடாது என்பதை அவரவர் புரிதலுக்கு ஏற்ப முடிவு செய் கிறார்கள். சில இடங்களில், குறிப்பிட்ட தகவல்கள் சட்டப்படி தெரிவிக்க வேண்டியவையாக இருந் தாலும் கூட, உயரதிகாரிகள் அல்லது அந்த உண்மைகள் தெரியக்கூடாது என்று விரும் புகிற சில சக்திகளின் நிர்ப்பந்தங்களால் அந் தத் தகவல்களை மறைப்பது, இழுத்தடிப்பது போன்ற விளையாட்டுகளும் நடக்கின்றன. தனிப்பட்ட ஆர்வத்துடன் இந்தச் சட்டத்தின் நோக்கங்களைப் படித்துப் புரிந்துகொண்டு ஈடுபாட்டுடன் அந்த மேசைகளில் அமர்ந் திருப்போர் மட்டுமே ஒரு கடமை உணர்வு டன் தகவல்களைத் தெரிவிக்கிறார்கள். வழக்கம்போல் அப்படிப்பட்டவர்களின் எண் ணிக்கை குறைவு.

பல இடங்களில், வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கே, தகவல் அலுவலர்களாகவும் பொறுப்பு தரப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக, பெரிதும் அடிபடுவது தகவல் தெரிவிக்கும் அலுவல் தான் என்று இதற்காக அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். “தக வல் ஆணையத்தின் ஆணைகளை, பல் வேறு அலுவலகங்களின் தகவல் அலுவலர் கள் மதிப்பதில்லை; அந்த ஆணைகளை எதிர்த்து வழக்குப் போடுவதும் நடக்கிறது. தகவல் தர மறுத்த ஒரு அலுவலரை ஆணை யம் கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதி யது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவருக்கு அபராதம் விதித்து ஆணை வந்தபோது அவர் குறிப்பிட்ட தக வலைத் தர முன்வந்தார்! தன்னைப் பற்றிய விமர்சனத்திற்குக் கவலைப்படாமல், பணம் போய்விடுமே என்ற கவலையுடன் அவர் நடந்துகொண்டது எந்த அளவுக்கு இப்படிப் பட்ட அலுவலர்களுக்குப் பொறுப்புணர்வு வலியுறுத்தப்பட்டிருக்கிறது என்ற எண்ணத் தைத்தான் ஏற்படுத்தியது,” என்றார் அப்ப டிப்படியேறி இறங்கச் சளைக்காத ஒரு செய் தியாளர்.

இப்படிப்பட்ட நிலையில், மாநிலத் தகவல் ஆணையத்தில் நான்கைந்து முறை மேல் முறையீடு செய்தாக வேண்டிய நிலை உள் ளது என்று தமிழ்நாடு தகவல் உரிமைக்கான பிரச்சார அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறி னர். தகவல் அலுவலர்கள் பற்றிய விவரங்கள் ஆணைய அலுவலகத்தில் வைக்கப்படாதது, அவ்வப்போது ஆணையமே மக்களுக்காக சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கையேடு களை வெளியிட வேண்டும் என்பது நடை முறைப்படுத்தப்படவில்லை என்பன போன்ற குறைபாடுகளையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பெரிய நகரங்களிலாவது ஊடக வெளிச் சம் உடனடியாகப் பாய்வதால் இந்தச் சட்டத் தின் பலன் மக்களுக்கு ஓரளவுக்காவது கிடைக்கிறது. சிறிய ஊர்களிலும், கிராமங் களிலும் சட்டத்தின் துணையை நாடுவோர் மதிக்கப்படுவதே இல்லை. அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம ஊராட்சிக்கு, ஊரில் தொடங்கப்பட்ட பல மேம்பாட்டுத் திட்டங்களின் கதி என்ன என்று கேட்டு கடிதம் அனுப்பிய ஒரு இளை ஞர், அந்த ஊராட்சித் தலைவரின் ஆட்க ளால் தாக்கப்பட்ட நிகழ்ச்சி ஊடகங்களில் வெளியானது. இப்படித் தாக்குவதும், மிரட்டு வதும் பல இடங்களில் நடப்பதாகக் கூறப்படு கிறது.

இந்தச் சட்டம் குறித்து இன்னும் பொது மக்களுக்கு முழுமையாகத் தெரியாமல் இருக்கிறது. அப்படித் தெரியாமல் இருப்பதே நல்லது என்று ஆட்சி பீடத்தில் இருப்போரும், அதிகார வர்க்கத்தினரும் நினைக்கிறார் களோ?, நாடு முழுவதும் இவர்களைப் பயன் படுத்தி ஆதாயம் அடைகிற பெரியதொரு சுய நலக் கூட்டம் அதைத்தான் விரும்புகிறதோ?

அப்படியானால், மக்களின் அடிப்படையான அறியும் உரிமை அரிக்கப்படுகிறது என்றே அர்த்தம். அந்த அரிமானத்தைத் தடுக்கும் ஆற்றல் மக்கள் சக்திக்குத்தான் இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டியெழுப்பிட, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை எளிய மக்களிடம் வலிமையாக எடுத்துச் சென்றாக வேண்டும்.