மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சிவிசி) தலைமை ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமித்தது எப்படி? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றவரை இத்தகைய உயரிய பதவிக்கு நியமித்ததன் பின்னணி என்ன? என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச். கபாடியா கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரதமர் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இப்போது தலைமை ஆணையர் நியமன விவகாரத்திலும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அரசின் பதிலை அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி, திங்களன்று நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அளித்தார். அப்போது பேசிய நீதிபதி, இந்த பதிலை பார்க்காமலேயே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டியுள்ளது, அதாவது ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அத்தகையவரை இதுபோன்ற மிக முக்கியமான பதவியில் அமர்த்தியது எப்படி என்பது தெரிந்தாக வேண்டும்.
தாமஸ் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு விவரத்தைப் பரிசீலனை செய்த பிறகே அரசின் பதிலை பரிசீலிக்க முடியும் என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாகக் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த ஆவணத்தைப் பரிசீலித்து பின்னர் முடிவு செய்வதாக நீதிபதி கபாடியா கூறினார்.
பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பான பதிலை அரசு தாக்கல் செய்தது. அப்போது பி.ஜே. தாமஸ் நியமனத்தில் உரிய தகுதி வரையறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அவரது நம்பகத்தன்மை எந்த அளவுக்கு அளவிடப்பட்டது என்றனர். குற்றப் பத்திரிகையில் பெயர் உள்ள ஒருவரை இத்தகைய உயர் பதவிக்கு பரிந்துரைத்தது எவ்விதம் என்பது வியப்பாக உள்ளது என்றனர்.
இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, பாமாயில் இறக்குமதி ஊழலில் தாமஸýக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இவர் மீது வழக்குத் தொடர அதனால்தான் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.
யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கைப் பார்த்தால், ஒவ்வொரு கட்டத்திலும் அவர் மீது குற்றச்சாட்டு இருப்பதாக வைத்துக் கொள்வோம், அப்படியிருப்பின் அவரை தலைமை ஆணையர் பதவிக்கு எவ்விதம் நியமிக்க முடியும்? அத்தகைய நபர்தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிறப்பாக பணியாற்றுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
ஒவ்வொரு கட்ட விசாரணை குறித்தும் சிபிஐ-யின் விளக்கம் தேவை என்றனர்.
பணியாளர்களுக்கான விதிமுறையில், ஒருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலே அவரது பெயர் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படக் கூடாது என்றுள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
2002-ம் ஆண்டிலிருந்தே இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போதிருந்தே அவரது பெயர் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் அவரால் ஊழல் கண்காணிப்பு ஆணையராக (சிவிசி) எப்படி சிறப்பாக செயலாற்ற முடியும்? அவருக்கே குற்ற உணர்வு, நெருடல் இருக்காதா? என்று நீதிபதிகள் கேட்டனர். இது மிகவும் முக்கியமான வழக்கு. எனவே ஒவ்வொரு கட்டமாக ஆராய்ந்து அதனடிப்படையில் தீர்ப்பு அளிக்கப் போவதாக நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கு தகுதியின் அடிப்படையில் ஏற்கப்பட்டதல்ல. இந்த முழு வழக்குமே நம்பகத் தன்மை அடிப்படையிலானது. அனைத்து நடைமுறைகளும் கே.வி. தாமஸ் நியமனத்தில் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பதை இந்த நீதிமன்றம் ஆராயும்.
இதுபோன்ற சில குற்றச்சாட்டுகள் கணக்கில் எடுத்துக் கொண்டால், நீதிமன்றங்களின் ஒவ்வொரு நியமனத்தையும் பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்று அட்டர்னி ஜெனரல் பதிலளித்தார். பொதுநல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் வாஹன்வதி வாதாடினார்.
தாமஸ் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். கேரளத்தில் உணவுத் துறைச் செயலராக கே.வி. தாமஸ் இருந்தபோதுதான் பாமாயில் இறக்குமதி ஊழல் நடைபெற்றது. இதில் அவர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கை மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கையாள்கிறது. ஆனால் தாமஸ் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையராக உள்ளார்.
மேலும் தொலைத் தொடர்புத்துறைச் செயலராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் இவருக்கும் தொடர்புள்ளது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் இப்பதவிக்கு தாமûஸ நியமிக்க வேண்டும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் என நிர்பந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாமஸ் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவிசி உள்ளிட்ட உயர் பதவிக்கு நியமிக்கப்படுபவரை தேர்வு செய்ய 3 பேரடங்கிய குழு உள்ளது. இந்தக் குழுவில் பெரும்பான்மை பெற்ற ஒருவரே நியமிக்கப்படுவார். அல்லது ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் நபரே இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஏற்காத நிலையில் தலைமை ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சட்ட விரோதமானது. இவர் செயல்படக் கூடாது என்றும், இவரது நியமனத்தை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்றும் தன்னார்வ அமைப்புகள் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தன.
No comments:
Post a Comment