Tuesday, December 18, 2012

தகவல் அறியும் ஆர்வலர் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

ஆமதாபாத்: குஜராத்தில் தகவல் அறியும் ஆர்வலர் கொலை செய்யப்பட்ட வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமித்ஜேத்வா. தகவல் அறியும் உரிசை சட்ட ஆர்வலர், இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம், குஜராத், செளராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள ஆசிய சிங்கங்கங்களின் சரணாலயமான கிர் காடுகளில் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடந்து வருவதாகவும், இதில் அம்மாநில பா.ஜ. எம்.பி. டினு சோலங்கி என்பவருக்கும் தொடர்பிருப்பதாகவும்,இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு தொடர்ந்த சில நாட்களில் (ஜூலை 20-ம் தேதி 2010) அவர் ஐகோர்ட் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் எம்.பி. உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பா.ஜ. எம்.பி. வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில் அமித் ஜேத்வா தந்தை தனக்கு நியாயம் கிடைக்க கோரி ஆமதாபாத் ஐகோர்ட்டில் அமித்ஜேத்வா கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரிக்க‌ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச்,. மனு ஏற்று சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

Monday, December 17, 2012

பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

கோவை : பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து "சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை, குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்து வைத்திருக்க, கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கணிசமான தொகை வழங்கப்படுகிறது. 

இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்றாலும், மலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குழந்தைகள் ஓரிடத்திலும், கணவர் வேறிடத்திலும் ஆண்டு கணக்கில் குடும்பமே பிரிந்து கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு பெண் ஆசிரியைகள் தள்ளப்படுகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் இடமாறுதல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாவட்டத்தில் உள்ள கணித காலிப் பணியிட விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்., 17ல் பெற்றார். அதில், 23.7.2012ல் பொதுமாறுதல் ஆணை வழங்கப்பட்டவர்கள் பட்டியலில், "எம்.பானு சரஸ்வதி' எனும் ஆசிரியையின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காடம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியை ஆக உள்ளார்.

ஆனால், இவர் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து காரமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் காரமடை பள்ளிகளில் விசாரித்தபோது, பானு சரஸ்வதி எனும் பெயரில் எந்த ஆசிரியையும் இல்லை என தெரிய வந்துள்ளது. காடம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எம்.பானுசரஸ்வதியிடம் கேட்டதற்கு, ""பட்டதாரி ஆசிரியை ஆக பதவி உயர்வு மூலம் காடம்பாறையில் நியமிக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் இடமாறுதல் கிடைக்கவில்லை. கணவர் ஓரிடத்திலும் குழந்தைகள் பெற்றோரிடமும் உள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,'' என்றார்.
ஆனால் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலருக்கு, கோவை பள்ளிக ளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

மலைப்பள்ளி ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கியதுபோல் ஆவணங்களில் காண்பித்து விடுவதும், பணம் பெற்றுக் கொண்டு அந்த இடங்களில் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமித்து வந்துள்ளதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தகுதி இருந்தும் இடமாறுதல் வழங்காமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகின்றனர்.

Sunday, November 18, 2012

தகவல் உரிமை சட்டம் : தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை

 



தமிழ்நாட்டில் பொது மக்களிடையே தகவல் அறியும் சட்டம் குறித்த விழிப்புனர்வு போதுமான தாக இல்i என்று மாநில தகவல் ஆணையர் கே.எஸ். ஸ்ரீபதி கூறினார்.சென்னையில் மத்திய தகவல் ஒளிப்பரப்பு அமைச் சகத்தின் நாடக பிரிவு சார் பில் வியாழனன்று (நவ.15) தகவல் அறியும் சட்டம் குறித்து நாடக கலைஞர்க ளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமை துவக்கி வைத்துப்பேசிய அவர், இச்சட்டம் அறிமுகமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இச் சட்டத்தின் கீழ் மாநிலத் தில் பொதுமக்கள் பல தக வல்களை கேட்டறிந்து பயன் பெற்று வருகிறார்கள். ஆனால் சிலர் இந்த சட்டத் தின் கீழ தவறான தகவல் களை கேட்டு நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.தகவல் அறியும் உரிமை சட்டம் எதற்காக என்பதை கூட இன்னும் பெரும் பாலான மக்களுக்கு தெரியா மல் உள்ளது என்று கூறிய அவர் இதுகுறித்த சம்மந்த பட்ட துறைகள் மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்த திட் டத்தை மக்களிடையே கொண்டு செல்லும் வகை யில் நவ. 19 முதல் 30 வரை தமிழகத்தில் விழுப்புரம், நாமக்கல், வேலூர், கிருஷ்ண கிரி, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர், நாகப்பட்டி னம், பெரம்பலூர், திருப் பூர், திருவண்ணாமலை, தர்மபுரி, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புனர்வு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதா கவும் ஸ்ரீபதி கூறினார்.இந்த பயிற்சி பட்டறை யில் தமிழக அரசின் முதன் மைசெயலர் எம்.குற்றலிங் கம், பத்திரிகை தகவல் அலு வலக கூடுதல் தலைமை இயக்குநர் கே.எம். ரவீந் திரன், மத்திய அரசின் நாட கம் மற்றும் பாடல் பிரிவின் இயக்குநர் எம். ராஜாமன் னார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Friday, September 28, 2012

தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்கலாம்.





உங்கள் ஊர் அஞ்சலகம் அந்தக் கடமையைச் செய்கிறதா?

தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏதாவது தகவல் கேட்க எண்ணுகிறீர்களா? ஆனால் அந்த அலுவலகத்தின் முகவரி தெரியவில்லையா அல்லது அதை நேரில் தேடிக் கண்டுபிடித்து அதற்கான மனுவை அனுப்ப அவகாசமில்லையா அல்லது அதற்கான பதிவுத் தபால் கட்டணத்தை மிச்சப்படுத்த எண்ணுகிறீர்களா?

நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் அந்த மனுவைக் கொடுத்து விட்டால் போதும். அவர்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்!

நம்ப முடியவில்லையா? சந்தேகமே வேண்டாம், சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

ஆனால் பல தபால் நிலையங்களில் நீங்கள் மனுவைக் கொண்டு கொடுத்ததும் வாங்க மறுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ‘புதிய தலைமுறை’ அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் சொன்ன பதில், ‘இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதே எங்களுக்குத் தெரியாது’.!

 இதற்கான ஆணைகள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதமே பிறப்பிக்கப்பட்டு விட்டன. அஞ்சலகங்கள் மத்திய அரசு, மத்திய அரசின் அமைச்சகங்கள், அவை சார்ந்த துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்திய உதவிப் பொதுத் தகவல் அதிகாரிகளாக (Central Assistant public information officers - CAPIO) செயல்பட வேண்டும் எனப் பிரதமர் ஆணையிட்டார். இதற்கான விரிவான சுற்றிக்கையை 17.10.2005 அன்று அஞ்சல் துறையின் துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த கல்பனா திவாரி, அப்போது தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக இருந்த திருமதி. வத்சலா ரகுவிற்கு அனுப்பியுள்ளார்  (Do.No.3&38/05&PG). அவரும் (Chief Postmaster General) ’அவசரம்... கோட்ட அஞ்சல் அதிகாரிகளுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்’  என்று 2005ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி குறிப்பெழுதியிருக்கிறார்.

சரி, அந்த சுற்றிக்கை சொல்வது என்ன?

1.மத்திய அரசிடம் தகவல் கோரி வரும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் சரியாக நிரப்பப்பட்டுள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். மனு     தெளிவாக இல்லை என்றால் அதைத் தெளிவாக     எழுத உதவ வேண்டும்.

2.மூன்று நகல்களில் ஒரு நகலில் ஒப்புதல் அளித்து அப்போதே விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

3.விண்ணப்பத்தோடு தகவல் பெற செலுத்தப்படும் கட்டணம் வங்கி வரைவோலையாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, நீதிமன்ற ஸ்டாம்ப்பாகவோ இருக்கலாம். அவை எல்லாமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதனால் கட்டணம் இப்படித்தான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது

4.மற்றொரு நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டுமோ அந்த அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அஞ்சல் அலுவலகமே அனுப்பிவிட்டு விண்ணப்பதாரருக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அஞ்சல் அலுவலகம் தனிப்பதிவேடுகளையும் விண்ணப்பதாரரால் ஒப்படைக்கப்பட்ட மூன்று     நகல்களில் ஒரு நகலையும் பராமரிக்க வேண்டும்.

5.இதே நடைமுறையில் முதல் மேல்முறையீடு     விண்ணப்பதையும் புதுடெல்லியில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பத்தையும் அஞ்சல்     அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிடலாம். இந்தப் பணிகள் எதற்கும் கூடுதல் கட்டணம் ஏதும் அஞ்சல் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியது இல்லை.

அஞ்சல் அலுவலகங்கள் செய்தாக வேண்டிய இந்த மக்கள் சேவை மக்களுக்குத் தெரியாது. ஏன், அஞ்சல் துறையில் பணியாற்றும் 70 சதவிகித அதிகாரிகளுக்குத் தெரியாது. கோட்ட, மண்டல, மாநில அளவிலான தலைமை அஞ்சல் அலுவலகங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சின்னத்திரையில் எல்லாவற்றையும் காட்டும் அஞ்சல்துறை இதை மட்டும் இன்றுவரை ஒளிபரப்பு செய்ததே இல்லை.

“95 சதவிகித அஞ்சல் அலுவலகங்களில் இப்படி ஒரு சுற்றறிக்கை எங்களுக்கு வரவில்லை. ஆகவே நாங்கள் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என மிக எளிதாகச் சொல்லி முகத்தில் அடிக்கிறார்கள். இது இந்தச் சட்டத்தின் உயர் நோக்கத்திற்கு எதிரான செயல்” என்கிறார், இந்தியன் குரல் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவன உறுப்பினர் எம்.சிவராஜ்.

ஆனால் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையம் இந்தச்  சேவையை செய்து கொண்டிருக்கிறது  இதைக் குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் விசாரித்தபோது, “மாதத்திற்கு நான்கு, ஐந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கிறோம். சிறு கிராமங்களில் இருந்து பெற்று கூட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கிருந்து உரிய இடங்களுக்கு அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கான பதிவேடுகளையும் பராமரித்து வருகிறோம்” என்கின்றனர்.

ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இதனை தெளிவுபடுத்தும் விதமாக போர்டு ஒன்று ஏன் வைக்கக் கூடாது?

ஒருவேளை அஞ்சல்துறையிடம் இந்த போர்டு வைப்பதற்கு பணம் இல்லை என்றால், ஆங்காங்கு உள்ள தொண்டு நிறுவனங்களை இத்தகைய போர்டுகளை வைக்க அனுமதிக்கலாமே!

இவள் பாரதி

Tuesday, September 18, 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் : முடக்க முயற்சி


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வரவேற்கத்தக்க சில புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 68 நாடுகளில் நடைமுறையில் இருந்தாலும் இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள்தான் மிகச் சிறந்தவை என்று கூறப்படுகிறது. இதன்படி யார் வேண்டுமானாலும் எந்தத் தகவலையும் அரசிடம் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யவோ, எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடவோ, எந்த நகலையும் இச்சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளவோ முடியும்.

இப்படிப்பட்ட சட்டத்திற்கு வேட்டு வைப்பதுபோல் 10-12-2010ம் தேதி சில திருத்தங்கள்  வர இருந்தது. ஒரு தகவல் விண்ணப்பத்தில் ஒரே பொருள் பற்றிய தகவல்கள்தான் கேட்க வேண்டும். ஒரு விண்ணப்பத்தில் 250 வார்த்தைகளுக்கு மேல் எழுதப்பட்டிருக்கக் கூடாது. விண்ணப்பதாரர் விருப்பப்பட்டால் விசாரணையின்போது தனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். 10க்கும் மேற்பட்ட அஞ்சல் செலவை மனுதாரரே ஏற்க வேண்டும் போன்ற திருத்தங்களை உற்றுக் கவனித்த மக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டமே இதனால் பயனற்றதாகிவிடும் என்று இதனை எதிர்த்துப் போராடினர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் வருவதற்குக் காரணமாக இருந்த இடதுசாரிகட்சிகளின் எதிர்ப்பு , பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அருணாராய் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய ஆலோசனைக் குழுவில் மக்களின் உணர்வுகள் குறித்தும் புதிதாகக் கொண்டுவரப் படவுள்ள மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  இதனால் இந்தச் சட்டத்தின் நோக்கமே சிதைந்துவிடும் என்று மத்திய அரசுக்குஅக்குழு பரிந்துரை செய்தது.  மாற்றுத்திருத்தங்களையும் முன் வைத்தது. இதனையொட்டி தற்போது மத்திய அரசு 31-07-2012 அறிக்கையில் சில ஆரோக்கியமான புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தற்போது வந்திருக்கும் மாற்றங்கள்:

  • பிரிவு 3: தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பம் 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். இது அரசியல் சட்டத்திற்கே எதிரானது  இருப்பினும் இதைக் காரணம் கூறி விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்யக்கூடாது.

  • பிரிவு 4 (எ): ஆவணங்களை அனுப்புவதற்கு 50க்கும் மேல் அஞ்சல் செலவானால் அதற்கு மேற்பட்டதை மனுதாரரே ஏற்க வேண்டும்.இதுவும் சட்டத்தை முடக்கும் முயற்சி நிலக்கறி ஊழலில் 1.83லட்சம்கோடி கொள்ளை அடிப்பவர்கள் இதற்கு செலவு செய்யமாட்டார்களாம்.

  • பிரிவு 5: வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் அதற்கான சான்றிதழை விண்ணப்பத்தோடு இணைக்கவேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பக் கட்டணம், தகவல்களுக்கான கூடுதல் கட்டணம் அனைத்தையும் செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் 25,000  ரூபாய்க்குக் கீழ் இருப்பவர்களே வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள்.

  • பிரிவு 10(1)ல் ஆணையத்திற்கு அனுப்பப்படும் மேல்முறையீடுகள் மீது நடவடிக்கை தொடர்வதற்கு தகுதியற்றவை எனக் கருதப்பட்டாலும் அந்த மேல் முறையீட்டினை தள்ளுபடி செய்யும் முன்பாக விண்ணப்பதாரர் தனது தரப்பினை எடுத்துச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும். பிரிவு 10(2)ல் உரிய படிவத்தில் அனுப்பப்படவில்லை என்ற காரணத்திற்காக மேல் முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படக் கூடாது. பிரிவு 10(3)(ஆ)ல் முதல் மேல்முறையீடு தீர்வு செய்யப்பட 45 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, பிரிவு 10(4)ல் முதல் மேல்முறையீடு அலுவலரையும் ஆணையம் அழைத்து விசாரிக்க அனுமதித்துள்ளது. பிரிவு 10(6)ல் முதல் மேல்முறையீடு அலுவலரிடமும் சாட்சியம் பதிவு செய்ய ஆணையம் கோரலாம்.

  • பிரிவு 12(1)ல் மேல்முறையீடு விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இடைவெளி இருக்குமாறு ஆணையம் அறிவிப்பு அனுப்ப வேண்டும். பிரிவு 12(3)ல் முதல் விசாரணைத் தேதியில் விண்ணப்பதாரர் வர இயலாத காரணங்கள் குறித்து ஆணையம் திருப்தியடைந்தால் இறுதி ஆணைகள் பிறப்பிப்பதற்கு முன் மனுதாரருக்கு மற்றுமோர் வாய்ப்பு அளிக்கலாம்.

  • பிரிவு 14: ஆணையம் தனது அறிவிப்புகளை மனுதாரர் மூலமாக, உரிய அலுவலர் மூலமாக, பதிவு அஞ்சல் ஒப்புதல் அட்டை மூலமாக, மின்னஞ்சல் உள்ளவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம் என்று திருத்தம் வந்துள்ளது.

- புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள இத்தகைய திருத்தங்கள் இச்சட்டத்திற்கு வலிமை கூட்டுவதாக இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இதனைப்  பயனுள்ள திருத்தங்கள் என்று பாராட்டுகிறார்கள்.

தகவல் அறியும் சட்டவிண்ணப்பங்கள்  500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்ற திருத்தம் விண்ணப்பதாரர் கேட்க வந்ததை சுருக்கமாக, அதே சமயம் தெளிவாக,துல்லியமாகக் கேட்க வரையறுக்கப் பட்டுள்ளது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர் இந்தச் சட்டத்தின் ஆர்வலர்கள்.

முன்னாள் மத்திய தகவல் ஆணையரும், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலருமான சைலேஷ் காந்தி கூறுகையில், "சில விண்ணப்பதாரர்கள் ஒரே தகவலைப் பெற பல கேள்விகளைக் கேட்பதுண்டு. ஒவ்வொரு கேள்வியும் கவனமாக, அதே சமயம் சிறப்பாக கேட்கப்பட வேண்டும். ஒரே பதிலைத் தரக் கூடிய பல கேள்விகளைக் கேட்பதற்கோ, ஒரே பொருள் தரக்கூடிய கேள்விகளை மற்றுமொரு விண்ணப்பமாக அனுப்பவோ எந்தத் தடையும் இல்லை" என்கிறார்.

இந்தியாவிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அதிகம் பயன்படுத்துவது தமிழகம்தான் என்பது வரவேற்கத்தகுந்த விஷயம். தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்தியாவில் வருவதற்கு காரணமாக இருந்தவர்களுள் முக்கியமானவரான அருணாராய் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காகப்  பல போராட்டங்களையும், விவாதங்களையும் முன் வைத்தவர்.ஆயினும் இன்னும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பல இடங்களில் அரசு அலுவலர்களையும், மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் வருத்தமளிக்கும் விஷயம். இந்த நிலையில் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் இந்தச் சட்டத்தை இன்னும் சாமானியர்களின் கரங்களுக்கும் கொண்டுசெல்லும் என்று நம்பலாம்.